அண்ணாமலை காட்டம்… தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்னாச்சு..?

மத்திய பாஜகவின் தலைமையில் கடைசி பட்ஜெட் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் காரசாரமான வாதங்களை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், மக்களவையில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் போது தி.மு.க. எம்.பி.
கனிமொழி
பேசினார். அப்போது அவர், சமூக நீதி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றின் முன் மாதிரியாக நாங்கள் இருக்கிறோம் என்று திராவிட மாடல் ஆட்சியை பெருமைப்படுத்தி பேச தொடங்கினார். அதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்து ட்வீட் போட்டார். அதில், தமிழகத்தின் தற்போதைய சூழலை பட்டியலிட்டு நிறைய கேள்விகளை கனிமொழியை நோக்கி அண்ணாமலை எழுப்பியிருந்தார்.

அண்ணாமலை தனது ட்வீட்டில்; திமுகவினர் பார்லிமென்ட் அரங்கை, தங்கள் கட்சி கூட்டம் என நினைத்து, பொய் மற்றும் அரை உண்மைகளை பரப்புவது வழக்கம். கனிமொழி தனது பேச்சை தொடங்குவதற்கு முன்பு சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உருவாக்குவதில் திமுக எவ்வாறு அறியப்படுகிறது என்பதைப் பற்றி பேசினார்.

சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டியலின சகோதர, சகோதரிகள் பயன்படுத்தும் குடிநீரில் மனித மலம் கலந்து மாசுபடுத்தியுள்ளனர். மாதங்கள் கடந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திமுக அமைச்சர் ஒருவர் கிராம பஞ்சாயத்து பிரதிநிதி ஒருவரை ஜாதியைக் காட்டி இழிவுபடுத்தினார்.

பல இடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம பஞ்சாயத்து பிரதிநிதிகள் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தின் போது கொடிகளை ஏற்ற அனுமதிக்கப்படவில்லை. மக்களவை எம்பி டிஆர் பாலு இந்து கோவில்களை உடைப்பதில் பெருமிதம் கொண்டார். மேலும், கடந்த காலத்தில் அவர்கள் தீண்டத்தகாதவர்கள் போல் நடத்தப்பட்டதாகக் கூறி கிளர்ச்சி செய்தார்.

சமீபத்தில், சேலத்தில் திமுக பிரமுகர் ஒருவர், கோயிலுக்குள் நுழைந்ததாக பட்டியலின இளைஞரைத் கேவலமாக திட்டி அவமானப்படுத்தியுள்ளார். கடந்த 20 மாதங்களில் திமுகவின் சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் இந்த சாதனைகள் ஒரு பத்திரிகையின் 20 பக்கங்களையும் நிரப்பும் அளவுக்கு உள்ளது” என்று அண்ணாமலை அதில் கூறியிருந்தார்.

இந்த நிலையில், திமுக அளித்திருந்த வாக்குறுதியின் படி வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை என்று அண்ணாமலை சுட்டிக்காட்டி ட்வீட்டி போட்டுள்ளார். அதில், ஆண்டுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்குவோம் என்ற பொய்யை கூறி ஆட்சிக்கு வந்த திமுக, கடந்த காலங்களில் நடந்த தனியார் வேலைவாய்ப்பு முகாம்களின் எண்ணிக்கையில் பாதியளவு கூட, கடந்த 2 ஆண்டுகளில் நடத்தவில்லை என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அம்பலம் ஆகியுள்ளது.

சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட பெரு நகரங்களில், 2018, 2019 ஆண்டை ஒப்பிடும்போது, கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு வேலைவாய்ப்பு முகாம்களைத்தான் நடத்தியிருக்கிறது திறனற்ற திமுக அரசு. புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்காமல், தனியார் நிறுவனங்கள் வழங்கும் வாய்ப்புகளையும் தடுத்து, இளைஞர்களைத் தொடர்ந்து வஞ்சித்துக் கொண்டிருக்கிறது திமுக. உடனடியாக, தாங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வர வேண்டும். தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று, தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன் என அண்ணாமலை இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.