தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தபடாமல் இருந்தது. அதன் காரணமாக, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வந்தனர்.
இதனையடுத்து தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் 2 முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான ஊழியர்களை தேர்வு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு நிர்வாகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (பிப்ரவரி 10ம் தேதி) மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் காலை 10 மணிக்கு முகாம் நடைபெற உள்ளது.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 25-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். மேலும், இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு கல்வித்தகுதியாக 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை அனைவரும் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்பவர்கள் சுயவிவரங்கள் அடங்கிய குறிப்பு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச்சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் கலந்து கொண்டு பயன் பெறலாம். எனவே இந்த அரிய வாய்ப்பை வேலைவாய்ப்பற்ற அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.