ஈபிஎஸ் முதல்வராக தென்னரசுவின் வெற்றிதான் உதவும் – முன்னாள் அமைச்சர்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து அதிமுக துணை பொதுச்செயலாளர் ஆர்.பி. உதயகுமார் பிரச்சாரம் செய்தார். அப்போது, கருங்கல்பாளையம் பகுதியில் பத்திரிகையாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் விவரம்;

கடந்த 2011
திமுக
ஆட்சியில் இருந்து செல்லும்போது தமிழகத்தில் முதியோர் ஓய்வு ஊதியத்துக்காக ஆண்டுக்கு ரூ 1200 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. சுமார் 12 லட்சம் பேர் ஓய்வூதியம் பெற்றனர். ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் 32 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டது. பிறகு எடப்பாடியார் மேலும் 5 லட்சம் பேரை சேர்த்து 37 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கினார். இதற்காக ஆண்டுக்கு ரூ4200 கோடி நிதி செலவிடப்பட்டது.

2011 வரை திமுக ஆட்சியில் 500 மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்பட்டது. அம்மா ஆட்சிக்கு வந்ததும் அது ஆயிரமாக ரூபாயாக உயர்த்தப்பட்டது. திமுக தனது தேர்தல் அறிக்கையில் ஓய்வூதியத்தை ரூபாய் 1500 என உயர்த்துவதாக வாக்குறுதி அளித்தது. ஆனால் இதுவரை நிறைவேற்றவில்லை. மாறாக 15 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பேரிடர் காலத்தில் தங்க சுரங்கங்கள் மூடப்பட்டிருந்த போதிலும் எடப்பாடி பழனிசாமி ஒரு லட்சம் பேருக்கு திருமணத்திற்காக தங்க காசுகளை வழங்கினார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திருமண உதவித்தொகை திட்டம், தாலிக்கு தங்கம் கொண்டு வந்ததே பெண்கள் உயர்கல்வி பயில வேண்டும் என்பதற்காக. பிளஸ் டூ வரை படித்தால் ரூபாய் 25000, பட்டம் பயின்றால் ரூபாய் 50,000 என்று அறிவித்தார். தங்கத்தையே பார்க்காத பல ஏழை குடும்பங்கள் திருமணத்திற்கு ஒரு சவரன் தாலிக்கு தங்கம் வழங்கினார். ஆனால், அதையும் திமுக ஆட்சி நிறுத்திவிட்டது. இன்று ஏதோ உயர்கல்வி பயில ரூபாய் ஆயிரம் வழங்குவதாக கூறுகிறார்கள். ஆனால் அம்மா ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பெண்களுக்கு ஸ்கூட்டி, அம்மா சிமெண்ட், அம்மா குடிநீர், அம்மா உப்பு, லேப்டாப், 2000 மினி கிளினிக்குகள் போன்ற எண்ணற்ற திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

திமுக தனது தேர்தல் அறிக்கையில் 520 வாக்குறுதிகள் கொடுத்தது. ஆனால் பலவற்றை இன்றும் நிறைவேற்றவில்லை. நீட், கல்விக்கடன், கேஸ் மானியம், பெட்ரோல் டீசல், ஆகியவற்றுக்கு மானியம் தருவோம் என்றார்கள், ஆனால் இதுவரை செய்யவில்லை. திமுக ஆட்சியில் சொல்வார்கள். ஆனால் செய்ய மாட்டார்கள். திட்டங்கள் வரும். ஆனால் வராது என்ற நிலையில் தான் வாக்குறுதிகள் உள்ளன. ஆனால் அம்மா கொடுத்த வாக்குறுதிகளை 100% நிறைவேற்றினார்.

அதிமுக ஆட்சியில் 11 மருத்துவ கல்லூரிகள் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போன்ற பல வளர்ச்சி திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. முடக்கப்பட இருந்த இரட்டை இலையை பாதுகாத்தவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அவர் இன்று மாலை ஈரோட்டில் நடக்கும் வேட்பாளர் அறிமுக பிரம்மாண்ட கூட்டத்தில் பங்கேற்கிறார். அவர் மீண்டும் முதல்வராக தென்னரசு வெற்றி பெற மக்கள் உதவ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.