கடந்த 3 ஆண்டுகளில் ஆளில்லா லெவல் கிராசிங்குகளில் தொடர் ரெயில் விபத்துகள் இல்லை – இந்தியன் ரெயில்வே

புதுடெல்லி,

கடந்த 3 ஆண்டுகளில் ஆளில்லா லெவல் கிராசிங்குகளில் தொடர் ரெயில் விபத்துகள் நிகழவில்லை என்று இந்தியன் ரெயில்வே புதன்கிழமை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்தியன் ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்திய ரெயில்வேயின் அகலப்பாதை நெட்வொர்க்கில் உள்ள அனைத்து ஆளில்லா லெவல் கிராசிங்குகளும் ஜனவரி 1, 2019-க்குள் பயணிகள் ரெயில் வழித்தடங்களில் இருந்து அகற்றப்பட்டன. மீட்டர் கேஜ் மற்றும் நாரோ கேஜ் பிரிவுகளில் 751 ஆளில்லா லெவல் கிராசிங்குகள் மட்டுமே உள்ளன. அந்த பிரிவுகளின் பாதை மாற்றத்தின் போது அவை அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள ஆளில்லா லெவல் கிராசிங்குகளில் ரெயில் விபத்துகளைக் குறைக்க இந்திய ரெயில்வேயால் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அகலப்பாதையில் உள்ள அனைத்து ஆளில்லா லெவல் கிராசிங்கும் ஜனவரி 31, 2019-க்குள் அகற்றப்பட்டுவிட்டன. அதிக ரெயில்/சாலை, வாகனப் போக்குவரத்துடன் கூடிய லெவல் கிராசிங்குகள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக மனிதர்கள் அல்லது சிக்னல்களுடன் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன.

விசில் பலகைகள், சாலை எச்சரிக்கை பலகைகள், வேகத்தடைகள் போன்ற லெவல் கிராசிங்குகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக அறிவுறுத்தல்கள் மற்றும் ஆய்வு இயக்கங்கள் அவ்வப்போது தொடங்கப்பட்டு வருகின்றன.

மேலும், லெவல் கிராசிங்குகளில் பாதுகாப்பாகச் செல்வதற்காக சாலைப் பயனாளர்களிடையே பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த பொது விழிப்புணர்வு பிரச்சாரங்கள்/பாதுகாப்பு முழக்கங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.