க்ளாராவின் காதல் பரிசு! – சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

மரமேரி மாத்யூவுக்கு இன்று தேவாலயத் தோப்பில் வேலை.

தலையில் கட்டிய முண்டாசும், இடுப்பில் கட்டிய பாளைக் கூடுமாய் தேவாலயத்தின் முன் மண்டபம் கடந்து கொல்லைப்புறம் போகும் மாத்யூவை, தேவாலயத்துக்குப் பிரார்த்தனைக்கு வந்தக் க்ளாரா பார்த்தாள்.

மாத்யூவின் கண்களும் கலந்தன க்ளாராவோடு.

‘செய்யும் தொழிலே தெய்வம்’ எனும் ரகத்தைச் சேர்ந்தவன் மாத்யூ.

கிறிஸ்துமஸ் பண்டிகையன்று கூட, எவராவது அழைத்தால், மரம் ஏறி இளநீர் குலை இறக்கித் தருதலோ, பனமரம் ஏறி பனங்குலை வெட்டி இறக்குவதோ செய்வான்.

யாராவது கேட்டால், “பண்டிகை நாளா இருந்தா மனுசனுக்குப் பசிக்காதா?, தாகம் எடுக்காதா..?’ என்று கேட்டு வாயடைப்பான்.

ஊரில் தொழிலாளர்கள் சங்கம் வைத்துத் தடுத்தார்கள். “நான் வேலைக்குப் போகாமல் வீட்டில் இருந்தால் எனக்கு சங்கம் பணம் தருமா..?” என்று வாதம் செய்தான்.

சங்கக் கட்டுப்பாடு என்றார்கள்.

“இதிலெல்லாம் சங்கம் தலையிட முடியாது…!” என்று வாதிட்டான்.

அன்றாடம் வேலை செய்தால்தான் வயிறு வளர்க்க முடியும் என்று இருந்தவர்கள், மாத்யூவின் பக்கம் சேர்ந்தார்கள்.

Representational Image

வேலைக்குச் செல்லக் கூடாது என்று ஒரு போதும் யாரையும் தடுத்தல் சரியில்லை என்று வாதாடி வெற்றி பெற்றார்கள்.

கடைசியாகச் “வருடம் முழுதும் எல்லா நாளுமே வேலைக்குப் போனாலும் தலையிடாது..” என்று முடிவுக்கு வந்தது சங்கம்.

மாத்யூ தென்னை மரம் பனை மரம் ஏறுவதில் கில்லாடி.

தென்னை மரம் ஏறுதலுக்கும், பனை மரம் ஏறுதலுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு.

தேங்காய் வெட்டுக்குத் தென்னை மரம் ஏறுவதற்கும், இளநீர் இறக்க ஏறுவதற்கும், கள்ளுக் கலயம் கட்ட ஏறுவதற்கும், வித்தியாசம் உண்டு.

“ஏறுறதுதான் ஏறுரே, தேங்காயப் புடிங்கிப் போட்டுட்டு, ஒரு கொலை எளநி எறக்கிப் போடு…!” என்றால், எப்போதாவது ஒரு மரம் இரண்டு மரத்திற்கு எனில், அவசர ஆத்தரத்துக்குச் செய்யலாம்.

தொழில் முறையில் அப்படிச் செய்ய முடியாது.

ஒவ்வொரு வேலைக்கும் அது அதற்கென ஒரு தனித்தன்மை உண்டல்லவா?

ஒவ்வொரு செயலுக்கும் ஒரு ‘ரிதம்’ இருக்கிறது. ஒவ்வொரு ‘வேல் லெந்த்’ இருக்கிறது, ஒவ்வொரு ‘ஃபிரீக்வன்ஸி’ இருக்கிறது. என்பான் மாத்யூ.

மாத்யூ..

‘பி ஈ’ பட்டதாரி.

‘பி. ஈ’ கடைசீ வருடம் படித்தபோது ‘கேம்பஸ் இண்டர்வியூ’வில் ‘செலக்ட்’ ஆனான். ‘ஐ டி’ யில் பதினைந்தாயிரம் சம்பளம் என்றார்கள்.

பெங்களூரில் ‘ட்ரெயினிங்’ என்றார்கள்.

வீட்டில் அம்மா மட்டும் இருக்கிறாள்.

கண் பார்வையற்ற அம்மா.

படித்தவனல்லவா… ஒரு கணக்குப் போட்டுப் பார்த்தான்.

Representational Image

கிராமத்தில் அரண்மனை போல வீடு.

நல்ல எருக்கட்டுள்ள கொல்லை.

பாலுக்குப் பசுமாடு ஒன்று இருக்கிறது.

தன் கிராமத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்திலேயேப் பொறியியல் கல்லூரி இருந்ததால் பி ஈ படித்துக் கொண்டே, தன் அப்பா செய்து வந்த தொழிலையும், விவசாயத்தையும் செய்ய முடிந்தது.

கண் பார்வையற்ற தாய்க்கு அனுசரணையாகவும் இருந்து வந்தான் மாத்யூ.

கிராமத்துக்கு அருகாமையிலேயே கல்லூரிகள் இருப்பதுப் போல , ஐ டி கம்பெனிகள் இருந்தால் இந்தப் பதினைந்தாயிரம் என்பது ஒரு நல்ல சம்பளம்தான்.

நகரத்தில், வீட்டு வாடகை கொடுத்துக் கொண்டு, கண் பார்வையற்ற அம்மாவை வைத்துப் பராமரிப்பது என்பது தேவையில்லை எனப் பட்டது.

“ஐ ஆம் நாட் இன்டரஸ்டட்’ என்று மெயில் அனுப்பிவிட்டான் மாத்யூ.

“நான் எப்படியோ சமாளிச்சுக்கறேன் மாத்யூ. நீ போ..” என்றாள் அம்மா.

“தேவையில்லைம்மா. நம்ம வயல்ல செய்யற விவசாயம், நம்ம கொல்லைல விளைய வைக்கற காய்கறிகள், இதுங்க போக மரம் ஏறி சம்பாதிக்கற பணத்துல நிம்மதியா கிராமத்துல வாழலாம்மா.”

மகன் தெளிவாக இருந்ததால் அம்மாவும் வற்புறுத்தவில்லை.

வேண்டாம் என்று மெயில் அனுப்பிய பிறகும், இரண்டு மூன்று முறை, தேர்ந்தெடுக்கப்பட்ட கம்பெனியில் இருந்து ‘மெயில்’ மூலம் அழைப்பு வந்தது.

‘கார்ப்பரேட்டு’களுக்கு, குறைந்த சம்பளத்தில் நிறைய வேலை செய்யக்கூடிய ஃப்ரஷ் இளைஞர்கள் தேவையல்லவா… அதுதான் விடாமல் அழைத்தார்கள்.

கிராமமம்தான் இனி வாழவாதாரமே என்று முடிவு செய்துவிட்டதால், தன்னுடைய எல்லைகளைத் தீர்மானித்தான். திட்டமிட்டு வேலைகளைச் செய்தான்.

வழக்கமாக தேவாலயத்தில தேங்காய் பறிப்பதற்கு மாத்யூவைத்தான் அழைப்பார்கள்.

காரணம், மாத்யூவின் பழுத்த அனுபவம்தான்.

மற்றவர்கள்போல அடுத்த வெட்டுக்கான தேங்காயை வெட்டிச் சாய்க்கும் மூடத்தனம் இருக்காது மாத்யூவிடம்.

தேங்காய் பறித்துத்தான் போடுவேன். பொறுக்கிச் சுமந்து போக வேறு ஆளு பாருங்க.. என்று சட்டம் பேச மாட்டான்.

ஏறிய மரத்தை விட கூடுதலாகக் கணக்குச் சொல்ல மாட்டான்.

இப்படி நிறைய நல்ல குணங்கள் உண்டு மாத்யூவிடம்.

மரம் எவ்வளவுதான் உயரம் என்றாலும் யோசனையே செய்ய மாட்டான் மாத்யூ.

மரம் ஏறி ஏறி,. கரலாக் கட்டைப் போல இருக்கும் வலுவான தோள்கள்.

தென்னம்பாளையில் வடிவமைக்கப்பட்ட அரிவாள் கூட்டை, கச்சிதமாக இடுப்பில் கட்டி, தலைக் கயிற்றைக் கால்களுக்கு இடையில் மாட்டி, தலையில் கட்டிய முண்டாசுடன், வலது உள்ளங் கையை மரத்தின் முன்புறம் கீழ் நோக்கிப் பிடித்தபடி, இடது உள்ளங்கையை மரத்தின் இடது மேற்புறத்தில் தள்ளினாற்போலவும் பிடித்துக் கொண்டு, லாகவமாக அவன் மரம் ஏறும் அழகே தனி.

‘தோள் கண்டார் தோளே கண்டார்…’ என்ற உருவகத்தை இங்கே போட்டால் பொருத்தமாக இருக்கும்.

முதன் முதலில் தன் பங்களாவுக்கு வந்து, தன் போர்முனைச் சாகசங்களைச் சொன்ன ஒத்தெல்லோவின் திறமையைக் கண்டு அவன் மேல் கண்டதும் காதல் கொண்ட டெஸ்டிமோனாப் போல…

முதன் முதலில் தேவாலயக் கொல்லையில் தேங்காய் பறிக்க வந்த மேத்யூவின் உடற்கட்டும், திறமையும் கண்டு அவன் மேல் காதல் கொண்டாள் தேவசகாயத்தின் மகள் க்ளாரா.

பிறகு ஒத்தொல்லோ, டெஸ்டிமோனாக் காதல் போல, படிப்படியாகக் காதல் வளர்ந்து இறுகியது.

பிரார்த்தனை கீதங்களில் கவனம் செல்லவில்லை க்ளாராவுக்கு.

“காதலர் தினமும் அதுவுமாய் , க்ளாராவை பார்த்துவிட்டு தோப்புக்குள் நுழைந்த மாத்யூ பரவசமாக உணர்ந்தான்.

காதலி கடைக்கண் காட்டிவிட்டாள் மாமலையும் ஓர் கடுகல்லவா…

முதல் மரமாக இருப்பதிலேயே உயரமான மரத்தில் ஏறினான்..

மனசு பூராவும் க்ளாரா க்ளாரா..

Representational Image

க்ளாரா தேவாலயத்துக்குள் இருந்தாளே தவிர அவள் மனம் முழுவதும் தென்னந்தோப்பிலேயே இருந்தது.

தேவாலயத்து நிகழ்ச்சிகள் அதன் போக்குக்கு நடக்க, ஒசைப்படாமல் எழுந்து, தென்னந்தோப்புக்குள் வந்தாள் க்ளாரா.

உயரமான மரத்தில் ஏறிக் கொண்டிருக்கும் மாத்யூவை ரசித்தாள்.

நல்ல பாசனமுள்ள, எருக்கட்டுள்ள தென்னந் தோப்பு அது.

தென்னை இளங்கன்றருகே சென்றாள்.

வாட்ட சாட்டமான தென்னங்குறுத்தின் அடிபாகத்திலிருந்து ஓர் ஓலையை நோகாமல் பிய்த்தெடுத்தாள்.

‘தொப் தொப்’ என மாத்யூ உயரமான மரத்திலிருந்து தள்ளிய தேங்காய்களின் சத்தம் ‘ட்ரம்’ இசைபோலக் கேட்டது க்ளாராவுக்கு.

தன் கூரிய பற்களால் கடித்து, தென்னை ஓலையைப் பதமாய் கிழித்தாள் க்ளாரா.

“ஹாய் க்ளாரா…”

மரமிரங்கிய மேத்யூ, தென்னையிளம் கன்றருகே ஏக்கத்தோடு தன்னையேப் பார்த்து நிற்கும் க்ளாராவைக் கண்டு அருகே சென்றான்.

      குறுத்தோலையை தன் பற்களால் பதமாக்கிச் செய்த இரண்டு மோதிரங்களை மாத்யூவின் விரல்களில் அணிவித்தாள் க்ளாரா

‘ஐ லவ் யூ’ சொல்லி, நெஞ்சில் முத்தமிட்டாள்.

      க்ளாரா அணிவித்த இரண்டு மோதிரங்களில் ஒன்றை எடுத்து க்ளாரா விரலில் சூடினான் மாத்யூ.,

அவள் நெற்றியில் முத்தினான் மாத்யூ.

      அப்போது வீசிய தென்றல், அருகே இருந்த வேப்பமரத்திலிருந்து குறும்பூக்கள் இவர்களின் மேல் வீசியது.

      பூமழைத் தூவி வசந்தங்கள் வாழ்த்த  ஒருவரை ஒருவர் அன்பாய் நோக்கயபடி வாலன்டைன் டே கொண்டாடினார்கள் க்ளாராவும் மாத்யூவும்

———————————-

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.