தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர் “இலங்கையில் 13 வது சட்டப்பிரிவு என்பது பெயர் அளவில் மட்டுமே உள்ளது. இது எந்த அளவுக்கு பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது என்பதை இலங்கைக்கு சென்ற பிறகு தான் தெரியும்.
இலங்கையின் வடகிழக்கு பகுதி மற்றும் யாழ்ப்பாணத்திற்கு செல்ல உள்ளோம். இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு தன்னாட்சி உரிமை இல்லை.
இதனை பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றதில் இருந்து தொடர்ச்சியாக பேசி வருகிறார். இதற்கிடையே 13 வது சட்டப்பிரிவு இலங்கையில் அமல்படுத்தினர் ஆனால் அதில் இலங்கை தமிழர்களுக்கான காவல் துறை மற்றும் நில உரிமை பறிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த விஷயத்தில் மத்திய பாஜக அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது. தமிழக பாஜகவும் இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளுடன் நட்பு உறவை வளர்த்துக் கொண்டு வருகிறது.
கடந்த 2017 ஆம் ஆண்டு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு செல்லும் பொழுது இந்தியா-இலங்கை தமிழர்கள் கலாச்சாரம் மையம் கட்டுவதற்காக நிதி வழங்கியதன் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் மிக அருமையாக கட்டப்பட்டுள்ளது.
அதனை இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க வரும் பிப்ரவரி 11ம் தேதி திறந்து வைக்க உள்ளார். அதற்காக மத்திய அரசு சார்பாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செல்ல உள்ளார்.
அதேபோன்று இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகள் மரியாதை நிமித்தமாக என்னை அழைத்ததின் பெயரில் இன்று பிற்பகல் இலங்கைக்கு செல்ல உள்ளேன்.
அங்குள்ள இலங்கை அரசியல் கட்சிகளுடன் நல்லுறவை மேம்படுத்த இந்த பயணம் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
நாளை மறுநாள் நடைபெறும் கலாச்சாரம் மையம் திறப்பு விழாவில் மத்திய இணை அமைச்சர் எல் முருகனுடன் நானும் கலந்து கொள்ள உள்ளேன்” என செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.