துருக்கி – சிரியா பூகம்ப பலி 19,000-ஐ கடந்துள்ள நிலையில், துருக்கியில் மட்டும் இதுவரை 16,546 பேர் உயிரிழந்ததாகவும், சிரியாவில் 3,162 பலியானதாகவும் அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சூழலில், துருக்கியில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் விழுந்து நொறுங்க நிலநடுக்கம் மட்டுமே காரணமா என்பதை அலசுவோம்.
கடந்த திங்கள்கிழமை அன்று துருக்கி நாட்டில் ஏற்பட்ட அடுத்தடுத்த சக்திவாய்ந்த பூகம்பத்தால் 10 மாகாணங்களில் சுமார் 6,444 கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு பக்கம் நம்பிக்கையை தளர விடாமல் யாரேனும் உயிர் பிழைத்திருப்பார்கள் என மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. அந்த நாட்டின் உள்கட்டமைப்பு மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு காட்சிகளையும் கேட்கும்போது இதற்காகதான் துருக்கி 20 ஆண்டுகளாக பேரிடரை எதிர்கொள்ள தயாராகி வந்ததா என்ற கேள்வியை உரக்க எழுப்புகிறது.
ரிக்டர் அளவில் 7.8 மற்றும் 7.6 என பதிவான இந்த அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் கட்டிடங்களுக்கு இந்த அளவு பாதிப்புகளை ஏற்படுத்துமா அல்லது அந்தக் கட்டிடங்களின் தரநிலை காரணமா அல்லது அதிகாரிகளின் அலட்சியப் போக்கா? – இப்படி அவிழாத மர்ம முடிச்சுபோல கேள்விகள் நீள்கின்றன.
“இவை அனைத்துமே காரணமாக இருக்கலாம். எங்கள் நாட்டில் நாங்கள் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களை எதிர்கொள்கிறோம். கட்டிடங்கள் இடிக்க பயன்படும் டிரினிட்ரோடோலூயின் வெடிமருந்தை இந்தப் பேரிடருக்கு உதாரணமாகச் சொல்லலாம். முதல் மற்றும் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்படுத்திய பாதிப்பு 5 மில்லியன் டன் மற்றும் 3.5 மில்லியன் டன் டிரினிட்ரோடோலூயினுக்கு நிகரானது. பெரும்பாலான கட்டிடங்கள் இந்த ஆற்றல் சக்தியை தாங்காது” என இஸ்தான்புல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஓகன் துய்சுஸ் தெரிவித்துள்ளார்.
“சக்திவாய்ந்த நிலநடுக்கம் அடுத்தடுத்து மிக குறைவான நேரத்தில் ஏற்பட்டது இதற்கு முக்கியக் காரணம். முதல் நிலநடுக்கம் ஏற்பட்டபோது கட்டிடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான பாதிப்பு ஏற்பட்டது. இரண்டாவதாக ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்தக் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
அதிகாரபூர்வ தகவலின்படி 6,000 முதல் 7,000 கட்டிடங்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல். முறையான தரநிலையில் கட்டப்பட்ட கட்டிடத்திற்கும் சேதம் என்பது இதில் நிச்சயம் இருந்திருக்கும்” என துருக்கியின் பூகம்ப ரெட்ரோஃபிட் சங்கத்தின் தலைவரான சினான் துர்க்கன் சொல்லியுள்ளார்.
கட்டிடங்கள் கட்டி எழுப்பப்படும்: அதிபர் – அடுத்த ஓராண்டு காலத்திற்குள் மீண்டும் அதே இடத்தில் கட்டிடங்கள் கட்டி எழுப்பப்படும் என துருக்கி நாட்டு அதிபர் ரசிப் தைய்யிப் எர்டோகன் புதன்கிழமை அன்று தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் பாதிக்கப்பட்ட இடத்தில் எப்படி கட்டிடங்கள் கட்டப்பட்டதோ அதேபோல இந்தப் பணிகள் நடக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தக் கலையில் தாங்கள் கைதேர்ந்தவர்கள் என்றும் சொல்லியுள்ளார்.
இடிந்து விழுந்த கட்டிடங்களில் பெரும்பாலானவை கடந்த 1999-க்கு முன்பு கட்டியவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தனைக்கும் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை எதிர்கொள்ள துருக்கி தயாராகி வந்துள்ளது. அதற்காக துருக்கியின் நில அதிர்வு வடிவமைப்பு குறியீட்டை மேம்படுத்தியது முதல் நகர்ப்புற திட்டத்தையும் முன்னெடுத்தது அரசு.
கடந்த 2022 நவம்பரில் துருக்கியின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 2,000 கட்டிடங்கள் பாதிக்கப்பட்டன. அப்போது 2035-க்குள் நாட்டில் உள்ள ஒவ்வொரு கட்டிடமும் பாதுகாப்பான கட்டிடங்களாக இருப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக துருக்கி அரசின் சுற்றுச்சூழல் மற்றும் நகரமயமாக்கல் அமைச்சர் முராத் குரும் தெரிவித்திருந்தார்.
முன்னதாக, 3.2 மில்லியன் குடியிருப்புகளை கட்டி உள்ளதாகவும். தற்போதைய விதிமுறைகளுக்கு ஏற்ப 2.5 லட்சம் கட்டிடங்கள் மாற்றப்பட்டு வருவதாகவும். 24 மில்லியன் மக்கள் பாதுகாப்பான இடத்தில் வசித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், பேப்பரில் துருக்கியின் நில அதிர்வு வடிவமைப்பு குறியீடு உலகளாவிய தரத்திற்கு ஏற்ற வகையில் இருப்பதாகவும். ஆனால், அதன் கள நிலவரம் முற்றிலும் வேறு எனவும் அவர் தெரிவித்துள்ளார். அனைவரும் அரசின் திட்ட பயனை பெற்றிருந்தால் நிச்சயம் திங்கள் அன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 5,000 கட்டிடங்களை காப்பாற்றி இருக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதன் ஊடாக உயிரிழந்த மக்களையும் காத்திருக்க முடியும் என அவர் சொல்லியுள்ளார்.
வாழ்வுக்கும், மரணத்திற்கும் இடையேயான போராட்டம்: மர்மரா நிலநடுக்கத்திற்கு பிறகும் கூட தரம்தாழ்ந்த கட்டுமான பொருட்களை கொண்டு கட்டிடங்கள் கட்டப்படுவது இந்த பாதிப்புக்கு காரணம் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். திங்கள் அன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பள்ளிகள், நிர்வாக கட்டிடங்கள், மருத்துவமனைகள், துருக்கி பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை ஆணைய கட்டிடமும் அடங்கும் என தெரிகிறது.
துருக்கியில் சுமார் 20 மில்லியன் கட்டிடங்கள் இருப்பதாக தெரிகிறது. அந்த நாட்டின் மிகப்பெரிய நகரமான இஸ்தான்புல்லில் விரைவிலோ அல்லது சில காலத்திற்கு பிறகோ சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் கருதுகின்றனர். அங்கு மட்டுமே சுமார் 1.2 மில்லியன் கட்டிடங்கள் இருப்பதாக தகவல். அதில் பெரும்பாலானவை நிலநடுக்கத்தை தாங்கும் நிலையில் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வகையிலான கட்டிடங்களை வலுப்படுத்துவது அல்லது மறுகட்டமைப்பு பணியை மேற்கொள்வது அதிக செலவுகளை பிடிக்கும். ஆனாலும் அதை அவசியம் தவிர்க்க முடியாமல் மற்றும் தாமதப்படுத்தாமல் துரிதமாக செய்ய வேண்டிய பணி என்றும் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இது வாழ்வுக்கும், மரணத்திற்குமான விஷயம். அதை கருத்தில் கொண்டு அரசும், மக்களும் இதை செய்ய வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தகவல் உறுதுணை: அல் ஜசீரா