மகாராஷ்டிரா மாநிலம், ஒஸ்மனாபாத்தில் நேற்று இரவு உர்ஸ் விழாவுக்காக ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் அங்குள்ள தர்கா ஒன்றில் கூடியிருந்தனர். தர்கா முழுக்க வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. 15,000-க்கும் அதிகமானோர் கூடியிருந்த கூட்டத்துக்குள் திடீரென ஒரு காளை மாடு புகுந்துவிட்டது. கூட்டத்துக்குள் புகுந்த காளை மாடு, அங்கிருந்தவர்களை கண்டபடி முட்டித் தள்ளியது. பொதுமக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள, தப்பி ஓடினர். அவர்கள் கண்ணில் தென்பட்ட கடைகள், கட்டடங்களுக்குள் புகுந்தனர்.
பெண்கள், குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். காளை மாடு புகுந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டு மக்கள் சிரமப்பட்டனர். மாடு முட்டியதில் பெண்கள், குழந்தைகள் என 14 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் அங்குள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாவில் வைரலாகப் பரவி வருகின்றன. சம்பவம் இரவில் நடந்ததால் ஒரே கூச்சல் குழப்பமாக இருந்தது. காளை மாட்டை ஊழியர்கள் போராடி பிடித்தனர்.
எப்படி திடீரென காளை மாடு விழாவுக்குள் புகுந்தது என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். எதிர்பாராத விதமாக மாடு உள்ளே வந்ததா அல்லது திட்டமிட்டு யாராவது காளை மாட்டை விழாவுக்குள் அனுப்பினார்களா என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. அதிக முஸ்லிம்கள் நிறைந்த ஒஸ்மனாபாத் நகரத்தின் பெயரை `தாராசிவ்’ என மாற்ற மகாராஷ்டிரா அரசு முடிவு செய்திருக்கிறது. முந்தைய உத்தவ் தாக்கரே அரசு இது தொடர்பாக முடிவு எடுத்தது. ஆனால் ஏக்நாத் ஷிண்டே ஆட்சிக்கு வந்த பிறகு அந்த உத்தரவை ரத்து செய்துவிட்டு, மீண்டும் ஒஸ்மனாபாத்தை தாராசிவ் என மாற்ற புதிதாக உத்தரவிடப்பட்டது.