கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லாரியை திருடிவிட்டு காணாமல் போனதாக நாடகமாடிய டிரைவர் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் தாதையங்கரைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (39). இவருக்கு சொந்தமான டிப்பர் லாரியை தாம்பரம் கன்னடபாளையத்தை சேர்ந்த டிரைவர் ஸ்ரீதர்(39) என்பவர் ஓட்டி வந்தார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கிருஷ்ணகிரி மாவட்டம் நாரிபுரம் பகுதியில் நிறுத்தி வைத்திருந்த லாரியை காணவில்லை என்று ஸ்ரீதர், லாரி உரிமையாளர் சுரேஷிடம் தெரிவித்துள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சுரேஷ் இது குறித்து பாகலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் நாரிபுரம் பகுதியை சேர்ந்த முருகேசன் (40) என்பவர் லாரியை திருடி கர்நாடகா மாநிலம் சானமங்கலம் பகுதியில் நிறுத்தி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், லாரியை பறிமுதல் செய்த போலீசார் முருகேசனை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தியதில் ஸ்ரீதரும், முருகேசனும் நண்பர்கள் என்பதும், இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து லாரியை திருட திட்டமிட்டு ஸ்ரீதர் லாரியை காணாமல் போனதாக நாடகமாடியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் ஸ்ரீதரை கைது செய்தனர்.