தமிழ் திரையுலகில் விஜய்யும், ஹிந்தி திரையுலகில் ஷாருக்கானும் தனக்கே உரிய பெரும் ரசிகர்கள் பட்டாளத்துடன் உச்ச நட்சத்திரமாக விளங்குகின்றனர். விஜய் படமும் சரி, ஷாருக்கான் படமும் சரி பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரியளவில் வசூலை குவிக்கிறது. இந்த இரண்டு நடிகர்களுக்கும் மக்கள் மத்தியில் எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை. தனித்தனியே இவர்களை திரைகளில் கண்டு ரசித்த ரசிகர்கள் பலருக்கும் இந்த இரண்டு பெரிய ஜாம்பவான்களையும் ஒன்றாக சேர்த்து திரையில் பார்க்க வேண்டும் என்கிற ஆசை இருந்து வருகிறது. ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பு தற்போது நிறைவேற போகிறது, இரண்டு நட்சத்திரங்களின் ரசிகர்களுக்கும் தற்போது வெளிவந்துள்ள செய்தி என்னவென்றால் விஜய் மற்றும் ஷாருக்கான் இருவரும் சேர்ந்து அதிக பொருட்செலவில் ஒரு பிரபலமான இயக்குனரின் கைவண்ணத்தில் உருவாகும் படத்தில் நடிக்கப்போகிறார்கள்.
மெகா பட்ஜெட் படங்களை கொடுத்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பதில் சிறந்து விளங்கும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் ரூ.900 கோடி பட்ஜெட்டில் படமெடுக்க திட்டமிட்டுள்ளார். இந்த படம் அறிவியல் புனைகதையுடன், இரண்டு ஹீரோக்களை கொண்ட படமாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலின்படி, அதிக பொருட்செலவில் உருவாகப்போகும் இந்த படத்தை ஒரு இரண்டு பிரபலமான தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இப்படத்திற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகி உள்ளது, மேலும் ஷாருக்கான் மற்றும் விஜய் தற்போது பிசியாக இருப்பதால் அவர்களிடம் இப்படம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த கொஞ்சம் கால அவகாசம் எடுக்கும் என்று கூறப்படுகிறது. இயக்குனர் ஷங்கர் தற்போது ராம் சரணை வைத்து ‘ஆர்சி 15’ படத்தையும் மற்றும் கமல்ஹாசனை வைத்து ‘இந்தியன் 2’ படத்தையும் இயக்குகிறார். இந்த இரண்டு படங்களின் பணிகளும் நிறைவடைந்தவுடன் விஜய் மற்றும் ஷாருக்கானை வைத்து படமெடுப்பர் என்று எதிர்பர்க்கப்படுகிறது.
விஜய் மற்றும் ஷாருக்கான் இருவரின் படங்கள் தனித்தனியாக வெளியானாலே பாக்ஸ் ஆபிசில் வசூல் அனல் பறக்கும், அதிலும் இந்த இரண்டு நடிகர்களும் ஒன்றாக சேர்ந்து நடிக்கும் படத்தின் வசூல் பாக்ஸ் ஆபிசில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்ல வேண்டியதில்லை. தமிழ் இயக்குனர் அட்லீ பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து இயக்கும் ‘ஜவான்’ படத்தில் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘பதான்’ படம் பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலை பெற்று வருகிறது, இதனை தொடர்ந்து ஷாருக்கான் நடிப்பில் அடுத்தடுத்து ‘ஜவான்’ மற்றும் ‘டுங்கி’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது. மறுபுறம் தற்போது விஜய் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு பணியில் பிசியாக இருந்து வருகிறார்.