ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக கே.எஸ் தென்னரசு போட்டியிடுகிறார். இது நிலையில் வேட்பாளர் அறிமுக கூட்டம் ஈரோடு மாவட்டம் வேப்பம்பாளையம் பகுதியில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் வேட்பாளர் தென்னரசுவை அறிமுகம் செய்யும் கூட்டம் நடைபெற உள்ளது.
இதற்காக ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள கிருஷ்ணா பாளையம் பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொள்வதற்காக வேன் மூலம் அழைத்து செல்வதற்காக அப்பகுதி அதிமுகவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த நிலையில் இதற்காக பொதுமக்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒன்றுகூடினார். இதனை தெரிந்து கொண்ட திமுகவினர் பொதுமக்கள் கூடியிருந்த பகுதிக்கு வந்து பொதுமக்களை வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு அழைத்து செல்ல அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர்.
இதனால் திமுகவினர் மற்றும் அதிமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு பொதுமக்களை அழைத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என அதிமுகவினர் பேசி வரும் நிலையில் அதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.