ஆண் – பெண் இருவருமே காதல் வயப்படுகிறார்கள் என்றாலும் பெரும்பாலும் ஆண்களே காதலை முதலில் வெளிப்படுத்துகிறவர்களாக இருக்கிறார்கள். பெண்ணைக் கவரும்படியாக பல்வேறு விதங்களில் ஆண்கள் தங்களது காதலை வெளிப்படுத்துகின்றனர். தாமாக முன் வந்து காதலை வெளிப்படுத்துகிற பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஆண்கள்தான் காதலை முதலில் சொல்ல் வேண்டும் என்றுதான் பெண்கள் விரும்புகிறார்களா என்பது இங்கு எழும் முக்கியக் கேள்வி. ஆண்களே அதிக அளவில் காதலை வெளிப்படுத்த வேண்டிய சூழல் எதனால் என்பது குறித்து இந்த அத்தியாயத்தில் உரையாடுவோம்…
நெடுங்காலப் பழக்கத்தின் தொடர்ச்சியே இது என்கிறார் உளவியல் மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்…

“காதலை ஆண்கள்தான் முதலில் சொல்ல வேண்டுமா என்கிற தலைப்பிற்குள் உளவியல் ரீதியாக எந்த விதமான ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவில்லை. பொதுவாக சமூகத்தில் ஆண், பெண் இருவருக்குள்ளும் உள்ள வேறுபாடுகள் காரணமாக இப்படியான கருத்துகள் இருக்கலாம். ஆனால், காதலை முதலில் சொல்வது என்பது ஒவ்வொரு தனிநபரின் குணத்தைப் பொறுத்தது. ஆணோ அல்லது பெண்ணோ காதலை வெளிப்படுத்துவதில் கொள்ளும் கூச்சம், காதல் ஏற்றுக்கொள்ளப்படாமல் போய்விடுமோ, நம்மைத் தவறாக நினைத்துவிடுவார்களோ என்கிற பயத்தின் காரணமாக காதலை வெளிப்படுத்தாமல் இருப்பார்கள். ஆண்களை விட பெண்களிடம் கூச்ச சுபாவம் அதிகம் இருப்பதால், ஆண்களே காதலை அதிகமாக வெளிப்படுத்துவது போல் தோன்றுகிறது.
பன்னெடுங்காலமாக பொருளீட்டுதல் மற்றும் பாதுகாத்தல் ஆகியவற்றை ஆண்களே செய்தனர். அப்படியான சூழலில் ஆண்களே முதலில் காதலை வெளிப்படுத்த வேண்டும் என்று பெண்கள் எதிர்பார்த்தார்கள். இப்போது பெண்கள் வெளியுலகத்துக்கு வந்து விட்டனர். வேலைக்குச் சென்று பொருளாதார ரீதியில் தன்னிறைவு பெற்றுள்ள தற்காலச் சூழலில் கூட அந்தத் தாக்கம் தொடர்வதாகவே பார்க்கிறேன்” என்கிறார் ஸ்வாதிக் சங்கரலிங்கம்.
ஆண்களைப் போல் பெண்கள் எளிதில் காதல் வயப்படுவதில்லை என்பதே காரணம் என்கிறார் மானுடவியலாளரான மோகன் நுகுலா…
“பரிணாம வளர்ச்சி பற்றிய வரலாற்று ஆய்வில் ஆண், பெண் இடையிலான உறவுத் தேர்வு குறித்து சுவாரஸ்யமான ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. ஒரு பெண் விலங்கு அதன் குட்டியை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதில் இருந்தே அதன் இயல்புத் தன்மை வடிவமைக்கப்பட்டுள்ளது. குட்டிகளின் வாழ்வாதாரமே, தாயின் வாழ்வாதாரமாக உள்ளது.
உதாரணத்திற்கு ஒரு பெண் புலிக்கு வேட்டையாடும் தன் பற்களைப் பயன்படுத்தி தன் குட்டியைக் கவ்வி கொண்டு செல்லும் பொறுப்பும் உள்ளது. இரைக்கும், குட்டிக்குமான வித்தியாசத்தை அந்த விலங்கு நீண்ட பரிணாமத்தில் இருந்தே பெற்றுள்ளது. இந்தத் தன்மையை பெரும்பாலான பாலூட்டி இனங்களில் பார்க்க முடியும். மனிதர்களுக்கு இந்த விலங்கினப் பண்புகள் இல்லை என்றாலும் கூட, இயற்கையின் அடிப்படையில் தாய்மையே பெண்களின் தன்மையாக உள்ளது. இங்கு தர்க்க ரீதியில் இவற்றை கேள்வி கேட்கலாம் என்றாலும் உயிரியல் அடிப்படையிலும், பரிணாமத்தின் அடிப்படையிலும் இதுதான் நிதர்சனம்.
பெண்கள் திருமணங்களை எப்படி அணுகுகிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனித்தாலே அது புரியலாம். குறிப்பாக தன் பெண்ணின் திருமணத்தை நடத்தி வைக்கும் தாய்மார்கள் பொருளாதாரம், எதிர்கால பாதுகாப்பு இவற்றை எல்லாம் கவனத்தில் கொள்வார்கள், அழகு, பாவனை எல்லாம் அவர்களுக்கு இரண்டாம்பட்சம் தான். முழுக்க முழுக்க எதிர்கால சந்ததியின் நலன் அடிப்படையில்தான் அவர்களது திருமணத்துக்கான தேர்வு இருக்கிறது. ஆண்களைப் பொறுத்த வரை அவர்களுக்கு அழகே பிரதானமாக இருப்பதால் தன் ரசனைக்கேற்ப ஒரு பெண் மீது ஈர்ப்பு கொண்டு காதலிக்கின்றனர். அதனால், ஒரு பெண்ணைக் கவர்ந்து அவளை காதலிக்க வைக்க ஆண்களே முழுக்க முழுக்க போராட வேண்டியுள்ளதால், அவர்களே காதலை சொல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
ஆண்கள் எப்படி பெண்களை ரசித்தார்களோ அதே போல் தற்காலத்தில் பெண்கள் ஆண்களை ரசிப்பதாகக் கூறிக்கொள்கிறார்கள். இது ஒருவித கருத்துதானே தவிர முழுக்க உண்மை இல்லை. ஆண்களை, பெண்கள் ரசிப்பார்கள்தான். ஆனால், அது ஓர் ஆணின் ரசனையை ஒத்தோ அல்லது ஆணின் காதலைப் போன்றதோ அல்ல. காதல் என்பது தனக்கும், தன் குழந்தைகளுக்குமான எதிர்காலப் பாதுகாப்பினை அடிப்படையாகக் கொண்டது என்கிற உயிரியல் பண்பே இன்றைய பெண்களிடமும் காணப்படுகிறது. இயற்கை ஆண்களை பெண்களை நோக்கியும், பெண்களை குழந்தைகள் மற்றும் எதிர்காலத்தை நோக்கியும் உருவாக்கியுள்ளது. அதனால்தான், ஆண்களை போல், பெண்களால் காதலை அணுக முடிவதில்லை, அதற்கு சமூகமும் ஒரு காரணமாக உள்ளது. ஆண்கள் ரசனை, உயிரியல் அடிப்படை என பல காரணங்களால் பெண்களைக் கவர வேண்டிய கட்டாயம் உள்ளது. அதனால், காதலை ஆண்களே சொல்ல வேண்டிய விதியை இயற்கையும், சமூகமும் ஏற்படுத்தியுள்ளது.
ஒரு பெண் சமூகம், பொருளாதாரம், உளவியல் சார்புகளைக் கடந்து ஓர் ஆண், எப்படி ஒரு பெண்ணை அழகில் இருந்து காதலிக்கிறானோ அதே போல இயல்பாக பெண்ணால் ஆணைக் காதலிக்க முடிந்தால் பெண்களும் காதலைச் சொல்லும் நிலை வரும், அப்படி ஒரு சூழல் வர வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம்” என்கிறார் மோகன் நூகுலா.
பார்வைக் கோணம்
வர்ஷா, தனியார் நிறுவன ஊழியர்: ஆண்கள் தான் அதிகளவுல புரொபோஸ் பண்றாங்கங்குறது உண்மைதான். ஆனா இப்ப அந்தச் சூழல் கொஞ்சம், கொஞ்சமா மாறிட்டு வருதுன்னு சொல்லலாம். ஏன்னா, முன்னாடி இருந்ததை விட இப்ப பெண்களுக்கு சுதந்திரம் நிறையவே இருக்கு. சமூக வலைதளப் பயன்பாடு, வெளியாட்கள் நிறைய பேரை சந்திச்சு பேசிப் பழகக்கூடிய வாய்ப்புகள் எல்லாம் இப்பதான் உருவாகியிருக்கு. அதனால தன்னோட பார்ட்னர் எப்படி இருக்கணும்ங்கிற தெளிவு பெண்களுக்கு அதிகமாயிருக்கு. ஆனாலும், ஆணுக்கும், பெண்ணுக்கும் உள்ள வித்தியாசம் என்னன்னா பெரும்பாலான ஆண்கள் வந்து குறுகிய காலத்திலேயே தனக்குப் பிடிச்ச பொண்ணுங்ககிட்ட காதலைச் சொல்லிடுவாங்க. நிறைய யோசிக்க மாட்டங்க, அந்த பெண்ணை பிடிச்சாலே போதுங்கிறது ஆண்களின் மனநிலை.

அதேநேரம், பெரும்பாலான பெண்கள் நல்லா யோசிச்சு, டைம் எடுத்துதான் சொல்லுவாங்க. அதுக்கு காரணம் அந்த ஆண் மேல ஒரு பாதுகாப்புணர்வு வரணும். இந்த நபர் சரியானவரா, கல்யாணம்னு வரும் போது குடும்பத்துக்கு சரிப்பட்டு வருவாரா? கல்யாணத்துக்கு அப்பறம் வாழ்க்கை எப்படி இருக்கும், கரியர் எப்படி இருக்கும்னு யோசிக்கிறதால நிறைய டைம் எடுத்துக்குறாங்க. சிலர் டைம் எடுத்து வேண்டாம்னு முடிவு எடுக்குறாங்க, டைம் எடுத்து காதலை சொல்றவங்களும் இருக்காங்க. இந்தக் கால இடைவெளியில்தான் ஆண்கள் காதலை முதல்ல சொல்லிடுற மாதிரி ஆகிடுது.
இப்பலாம் இந்த டேட்டிங் ஆப்லாம் வந்த பிறகு ஆண், பெண் ரெண்டு பேருமே தெளிவாதான் இருக்காங்க. ரெண்டு பேரும் பேசி ஒருத்தரை, ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டு அதுக்குப் பிறகு சரிவரும்னு தோணுச்சுன்னா அந்த உறவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டுப் போலாம்னு முடிவு பண்றாங்க. இப்ப இந்த நவீன காலத்தில் பொண்ணுங்க காதலைச் சொல்றது அதிகமாயிட்டு இருக்குங்கிறது தான் என்னோட கருத்து. காதலைச் சொல்றதுல ஆண்களும், பெண்களும் எடுத்துக்குற கால அளவுலதான் வேறுபாடு இருக்கு. இந்த வித்தியாசத்தாலதான் ஆண்களே காதலை முதல்ல சொல்ற மாதிரி தெரியுது. இன்னும் காலம் போகப் போக காதலை முதலில் சொல்ற பெண்களோட விகிதம் அதிகரிக்கத்தான் செய்யும்.
செளந்தர்யன் வெங்கட், தனியார் நிறுவன ஊழியர்: ஒரு பெண் காதலை முதலில் வெளிப்படுத்துறதை இரண்டுவிதமா பார்க்கலாம். நம்ம கூட படிச்சவங்க, நீண்ட நாள் பழக்கத்தில் உள்ள பெண்கள் காதலை வெளிப்படுத்தும் போது அது எந்தவித அதிர்ச்சியையும் ஏற்படுத்துறதில்லை. ஏன்னா அவங்களை நீண்ட கால நட்பு அந்தக் காதலை இயல்பா எடுத்துக்க வைக்குது. ஒருவேளை நமக்கு முன்ன பின்ன தெரியாதவங்க, கொஞ்ச நாள் பழகினவங்க, சோஷியல் மீடியாவில் அறிமுகமான பெண் வந்து ஆண்கிட்ட காதலை வெளிப்படுத்தும் போது, அதை இயல்பா எடுத்துக்கிற மனப்போக்கு இன்னும் அமையலன்னுதான் சொல்லணும்.

அவங்க பேசுறதுல இருந்தே இது நட்பைத் தாண்டி அடுத்தகட்டத்துக்கு நகர்றத சில நேரங்களில் நம்மால கண்டுபிடிச்சிட முடியும். நமக்கு ரொம்ப காலம் பழக்கமானவங்க மேல காதல் உண்டாகுறப்போ ஒண்ணு அவங்க சொல்லணும், இல்ல நாம சொல்லணும்னு நினைக்கிற நேரத்தில் அவங்க சொல்லும்போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும். தூரத்துல இருந்தே ரசிச்சுட்டு திடீர்னு ஒரு நாள் ஒரு ஆண்புரொபோஸ் பண்ற மாதிரி திடீர்னெல்லாம் பொண்ணுங்க புரொபோஸ் பண்ண மாட்டாங்க. ஏன்னா அப்படிப் பண்ணும்போது அதை சந்தேகத்தோட அணுகுற மனப்பாங்கு இருக்கு. அது முழுசா உடையுறப்போ வேணா பொண்ணுங்க முதல்ல காதலை வெளிப்படுத்துற சூழல் வரும்.