ஆர்.எஸ்.எஸ். அணி வகுப்பு தொடர்பான முக்கிய உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது. இந்த தீர்ப்பு அரசியல் அரங்கில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதியளிக்க பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என கூறி தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதியளிக்கும்படி உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். சார்பில் 45 மேல்முறையீட்டு மனுக்களை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் விசாரித்தனர்.
ஆர்.எஸ்.எஸ். தரப்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஏற்கனவே அணிவகுப்புக்கு அனுமதியளித்த உத்தரவை மாற்றியமைத்து, சுற்றுச்சுவருடன் கூடிய மைதானத்தில் நடத்த உத்தரவிட்டது தவறு என்பதால், இந்த மேல் முறையீட்டு வழக்கு விசாரணைக்கு உகந்தது தான் என வாதிடப்பட்டது.
ஒருபுறம் அமைதி பூங்கா எனக் கூறிவிட்டு, இன்னொருபுறம் சட்டம் ஒழுங்கு பிரச்னை என அனுமதி மறுப்பதாகவும், சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு அரசு மற்றும் காவல் துறை தரப்பில், சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதியளிக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அணிவகுப்பு நடத்தப்பட மாட்டாது என ஆர்.எஸ்.எஸ். அறிவித்த நிலையில், இந்த மேல் முறையீட்டு வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனத் தெரிவிக்கப்பட்டது.
சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்கவே அரசு முயற்சித்ததாகவும், உளவுத்துறை அறிக்கை அடிப்படையில் காவல் துறையினர் செயல்பட்டதாகவும் அரசுத்தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
அணிவகுப்புக்கு அனுமதி கோரி முறையாக விண்ணப்பித்தால், சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள், தனிப்பட்ட முறையில் பரிசீலித்து தகுந்த உத்தரவுகளை பிறப்பிப்பர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு, சுற்றுச்சுவருடன் கூடிய மைதானத்தில் அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தனர்.
மேலும், கருத்துரிமை, பேச்சுரிமையை தடுக்காத வகையில் தமிழக அரசு செயல்பட வேண்டும் என தமிழக அரசிற்கு அறிவுறுத்திய நீதிபதிகள், கடுமையான ஒழுங்குடன் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு பேரணிகளை நடத்த அனுமதிக்க காவல்துறைக்கு உத்தரவு
மேலும், ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி கோரி மீண்டும் விண்ணப்பிக்கலாம் எனவும், விண்ணப்பங்களை சட்டப்படி பரிசீலித்து முடிவெடுக்க காவல் துறைக்கு உத்தரவிட்டனர்.