ஈரோடு கிழக்கில் பெட்டி பெட்டியாக டெலிவரி… டீலிங் அமைச்சர்கள்… சீறும் எடப்பாடி!

ஈரோடு அருகே தனியார் மண்டபத்தில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய
எடப்பாடி பழனிசாமி
, திமுக பல பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்தது. எனவே அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை வெற்றி பெற செய்து திமுகவை தேர்தலில் வாக்காளர்கள் தோற்கடிக்க வேண்டும். ஏற்காடு இடைத்தேர்தலில் ஜெயலலிதா பெற்ற வெற்றி 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் எதிரொலித்தது.

எம்.ஜி.ஆர் கொண்டு வந்த திட்டம்

அதேபோல் தென்னரசுவின் வெற்றி வரும் 2024 மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும் என்று கூறினார். எம்.ஜி.ஆர் அறிமுகப்படுத்திய பொங்கல் இலவச வேட்டி சேலை திட்டத்தால் ஈரோட்டில் விசைத்தறித் துறை வளர்ந்தது. ஆனால் திமுக ஆட்சியில் மின் கட்டணம் 52 சதவீதம் வரை கடுமையாக உயர்த்தப்பட்டது. இலவச துணி உற்பத்திக்கான ஆர்டர்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் விசைத்தறி உரிமையாளர்கள் தறிகளை பழைய இரும்பு கடைகளுக்கு விற்கும் நிலைக்கு ஆளாகினர். பலர் வேலையிழந்தனர்.

திமுக ஆட்சியில் கடன்

அதிமுக ஆட்சியில் 5,000 ரூபாய் ஒரு குடும்பத்தின் உணவு தேவைக்கு போதுமானதாக இருந்த நிலையில் தற்போது மாதம் 7,500 ரூபாய் தேவைப்படுகிறது. அந்த அளவுக்கு அனைத்துப் பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளன. அதிமுக ஆட்சியில் மாநிலத்தின் கடன் 4.80 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. 20 மாத திமுக ஆட்சியில் கூடுதலாக 1.64 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு கடன் உயர்ந்துள்ளது. அதிமுக ஆட்சியில் ஆண்டுக்கு 55 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி, 2.75 லட்சம் பெண்களுக்கு ஸ்கூட்டி, 1 லட்சம் ஏழைகளுக்கு 1 சவரன் தங்க நாணயத்துடன் திருமண உதவி வழங்கப்பட்டது.

பெண்களுக்கு சலுகைகள்

இதுபோன்ற அனைத்து நலத்திட்டங்களும் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டன. திமுக 520 தேர்தல் வாக்குறுதிகளை அளித்தது. ஆனால் பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய், கேஸ், பெட்ரோல், டீசல் மானியம் உள்ளிட்ட பல வாக்குறுதிகள் நிறைவேற்றப் படவில்லை. அதிமுக ஆட்சியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. தற்போது ஒவ்வொரு ஆண்டும் 564 பேர் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேருகிறார்கள். முதல்வர் எப்போதும் தன் குடும்பத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறார்.

குடும்ப ஆட்சிக்கு முடிவு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் மூலம் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். கலெக்ஷன், ஊழல், கமிஷன் இவையே ஸ்டாலின் ஆட்சியின் அடிப்படை. அதிமுகவிற்கு மக்கள் அளித்து வரும் ஆதரவால் திமுகவினர் பீதியில் உள்ளனர். தேர்தல் பணிக்காக பல அமைச்சர்களை நியமித்து வாக்காளர்களுக்கு ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து வருகின்றனர்.

அதிமுக ஆட்சியில் நலத்திட்டங்கள்

அதிமுக ஆட்சியில் ஈரோட்டுக்கு ரூ.484 கோடியில் ஊராச்சிக்கோட்டை குடிநீர் திட்டம் அமல்படுத்தப்பட்டது. திமுக ஆட்சியில் இன்று வரை பலருக்கு தண்ணீர் கொடுக்க முடியவில்லை. 1,652 கோடி அத்திக்கடவு அவினாசி திட்டத்தில் 90 சதவீதம் அதிமுக ஆட்சியில் முடிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை திட்டம் நிறைவேறவில்லை.

அதிமுக ஆட்சியில் ரூ.81 கோடி மதிப்பீட்டில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல், ரூ.54 கோடி மதிப்பில் ஜி.ஹெச் அருகே மேம்பாலம், ஈரோடு ரிங்ரோடு ரூ.70 கோடியில் கலெக்டரேட் கட்டிடம், ரூ.42 கோடியில் பஸ் ஸ்டாண்ட், ரூ.30 கோடியில் நேதாஜி மார்க்கெட், ரூ.150 கோடியில் பெரும்பள்ளம் நவீனமயமாக்கல், வ.உ.சி பூங்கா சீரமைப்பு பணிகள், ஸ்மார்ட் சிட்டி போன்ற எண்ணற்ற பணிகள் ஈரோடு கிழக்கு தொகுதியில் மேற்கொள்ளப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.