ஈரோட்டில் சபரீசன் என்ட்ரி..? ஒரே சிட்டிங்கில் மொத்தமும் முடிஞ்சது..!

இடைதேர்த்தல் நெருங்கி வருவதால் ஈரோடு கிழக்கு தொகுதி 24 மணி நேரமும் அறுவடைக்கு காத்திருக்கும் வயல் பகுதி போல பரபரப்பாக உள்ளது. இந்த தேர்தலில் அதிமுகவும் – காங்கிரசும் நேரிடையாக மோத, கூட்டணி கட்சிகள் பக்கபலமாக தேர்தல் பணிகளை கவனித்து வருகின்றன. ஆளுகட்சியான திமுக காங்கிரசுக்கு வாய்ப்பு கொடுத்து ஈவிகேஎஸ் இளங்கோவனை வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

அவரை பெரு வாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து தமிழக மக்கள் முன்பு தலை திமிர வேண்டும் என்பதே திமுகவுக்கு முதன்மை நோக்கமாக உள்ளது. அதிமுகவை வீழ்த்துவது கூட இரண்டாம் பட்சம்தான். இதற்காக, தேர்தல் களத்தில் போர் வீரர்களை போல 11 அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் அடங்கிய 31 பேர் கொண்ட வலுவான குழுவை தேர்தல் பணிக்காக நிறுத்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினின் மருமகனான சபரீசன் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள தொழிலதிபர்கள், வியாபாரிகள் மற்றும் பல்வேறு சங்கங்களை சந்தித்து வருவதாக தகவல் கசிந்துள்ளது.

நேற்று இவர் ஈரோடு சென்று கிழக்கு தொகுதியில் பெரும்பான்மை சமூகமான செங்குந்தர் மகாஜன சங்க நிர்வாகிகளை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. மேலும், ஈரோடு கல்வி நிறுவனங்களின் சங்கம் மற்றும் வணிகர் சங்கங்கள் மற்றும் நெசவாளர் சங்கத்தையும் சந்தித்து பேசியுள்ளாராம்.

ஈரோடு மேட்டுக்கடையில் உள்ள தங்கமஹாலில் இந்த கூட்டம் நடந்துள்ளது. கூட்டம் தொடங்குவதற்கு முன்பு ஒவ்வொருவருக்கும் 5 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டு பின்னர் சபரீசன் 30 நிமிடங்கள் வரை வர்த்தக சங்கத்துடன் செலவழித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்ததாக சொல்கின்றனர்.

அதனை தொடர்ந்து இன்று காலை 9 மணி முதல் வியாபாரிகள் சங்கம், கடை உரிமையாளர்கள் சங்கம், ஜவுளி வியாபாரிகள் சங்கத்தினரை அதே மஹாலில் வைத்து சபரீசன் சந்தித்துள்ளார். குறிப்பாக இந்த கூட்டங்களின்போது கட்சிக்காரர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி மட்டுமே இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியை சார்ந்த பல்வேறு தொழிலதிபர்கள் மற்றும் சங்கங்கள் இன்று சபரீசனை சந்தித்து தங்கள் குறைகளை தெரிவித்தனர். அவர்களை அனைவரையும் தனித்தனியே சந்தித்த சபரீசன் தேர்தலுக்கு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டதோடு தேர்தல் முடிந்ததும் தேவையானதைச் செய்வதாக உறுதியளித்தார் என சொல்கின்றனர். ஏற்கனவே படை பலம், பண பலம் அதிகாரம் என அசுர பலத்துடன் உள்ள ஆளுங்கட்சி வர்த்தக ரீதியாக சபரீசனையும் அனுப்பி வாக்கு வங்கியை பெருகிகொண்டதாக கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.