பெங்களூரு: விண்ணுக்கு வீரர்களை அனுப்பும் ககன்யான் திட்ட பணிகளை இஸ்ரோ தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இதில் கேப்சூல் வகை விண்கலத்தில் 3 விண்வெளி வீரர்கள் ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பப்படுவர். இந்த விண்கலம் 400 கி.மீ தொலைவில் உள்ள சுற்றுவட்டபாதையில் 3 நாள் சுற்றியபின் விண்வெளி வீரர்களுடன் பூமி திரும்பி கடலில் விழும்படி வடிவமைக்கப்படுகிறது. கடலில் விழுந்தபின் அந்த விண்கல கேப்சூலை கடற்படையினர் மீட்டு அதிலிருந்து விண்வெளி வீரர்களை வெளியேறச் செய்வர்.
இதற்கான பரிசோதனையில் இஸ்ரோவும், கடற்படையும் கடந்த செவ்வாய்க் கிழமை ஈடுபட்டன.இதற்காக கேரளாவின் கொச்சியில் விண்கல கேப்சூலை தண்ணீரில் இருந்து மீட்கும் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு விண்கல மாதிரியை மீட்கும் முயற்சிகள் பல கட்டங்களாக மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பரிசோதனையை இஸ்ரோவும், கடற்படையும் இணைந்து மேற்கொண்டன.
இது குறித்து இஸ்ரோ விடுத்துள்ள செய்தியில், ‘‘விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக மீட்பதுதான், ககன்யான் திட்டத்தில் இறுதியான நடவடிக்கை.
இந்த மிக முக்கியமான நடவடிக்கையை மிக குறைவான நேரத்தில் மேற்கொள்ள வேண்டும். இதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (எஸ்ஓபி) இறுதி செய்ய வேண்டியுள்ளது. இந்த பரிசோதனை முதலில் துறைமுகத்தில் மூடப்பட்ட நீர்நிலை பகுதியிலும், பின்னர் திறந்தவெளி கடல் பகுதியிலும் மேற்கொள்ளப்படும்’’ என தெரிவித்துள்ளது.