கடந்த ஆண்டின் பட்ஜெட் உரையை வாசித்த விவகாரம்: மன்னிப்பு கோரினார் ராஜஸ்தான் முதல்வர்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு பட்ஜெட் உரையை வாசித்ததற்காக அம்மாநில முதல்வர் அஷோக் கெலாட் மன்னிப்புக் கோரியுள்ளார்.

ராஜஸ்தானில் நிதித்துறை, முதல்வர் அசோக் கெலாட் வசம் உள்ளது. அவரது தலைமையிலான காங்கிரஸ் அரசின் கடைசி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு இம்மாநிலத்தில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த பட்ஜெட் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது. முன்னதாக, பட்ஜெட்டை முதல்வர் அசோக் கெலாட் வாசித்தார். அப்போது, கடந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை அவர் தவறுதலாக வாசித்துக் கொண்டிருப்பதை தலைமை கொறடா மகேஷ் ஜோஷி குறுக்கிட்டு சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து, அவையில் இருந்த பாஜக எம்எம்ஏக்கள் முதல்வருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தனது தவறை உணர்ந்த முதல்வர் கெலாட், கால அவகாசம் கேட்டதை அடுத்து சபாநாயகர் சி.பி. ஜோஷி அவையை அரை மணி நேரத்திற்கு ஒத்திவைத்தார்.

இந்தச் சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான வசுந்தரா ராஜே சிந்தியா, ”முதல்வர் அஷோக் கெலாட் 8 நிமிடங்களுக்கு கடந்த ஆண்டு பட்ஜெட் உரையை வாசித்துள்ளார். ராஜஸ்தான் வரலாற்றில் இப்படி நடந்திருப்பது இதுதான் முதல்முறை. நான் முதல்வராக இருந்தபோது, பட்ஜெட் உரையை தொடர்ந்து பலமுறை சரிபார்த்துவிட்டுத்தான் வாசிப்பேன். ஆனால், எவ்வித சரிபார்ப்புப் பணிகளையும் மேற்கொள்ளாமல் முதல்வர் கெலாட் பட்ஜெட் உரையை வாசித்துள்ளார். கடந்த ஆண்டு பட்ஜெட் உரையை வாசித்த ஒரு முதல்வரின் கைகளில் ஒரு மாநிலம் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க முடியும்” என கேள்வி எழுப்பினார்.

இந்த விவகாரம் குறித்து கடுமையாக விமர்சித்துள்ள பாஜக எம்எல்ஏ ராஜேந்திர ரத்தோர், ”பட்ஜெட் ஏற்கெனவே கசிந்துவிட்டதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே, இந்த பட்ஜெட்டை அவையில் சமர்ப்பிக்க முடியாது. கடந்த ஆண்டு பட்ஜெட் உரையை வாசித்ததன் மூலம் ராஜஸ்தான் சட்டப்பேரவையை முதல்வர் அசோக் கெலாட் அவமதித்துவிட்டார்” என குற்றம்சாட்டினார்.

அரை மணி நேரம் கழித்து அவை மீண்டும் கூடியதும், முதல்வர் அசோக் கெலாட், தனது பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார். எனினும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்எல்ஏக்கள் கோஷங்களை எழுப்பினர்.

கடும் அமளிக்கு மத்தியில் கெலாட் பட்ஜெட் உரையை வாசித்தார். அப்போது, ”நடந்த தவறுக்காக நான் மன்னிப்பு கோருகிறேன். இது தவறுதலாக நிகழ்ந்துவிட்டது” என தெரிவித்தார். மேலும், ”என்னிடம் வழங்கப்பட்ட பட்ஜெட் உரையில் ஒரு பக்கம் தவறுதலாக சேர்க்கப்பட்டுவிட்டது. அதுதான் தவறுக்குக் காரணம்” என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.