கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. வேகமாக பரவிய கொரோனா தொற்றுக்கு எதிராகத் தடுப்பூசி கண்டறியப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டது. இந்தியாவில் பெரும்பாலும் கோவிஷீல்ட் தடுப்பூசியே பொதுமக்களுக்கு அதிகம் செலுத்தப்பட்டது.

கொரோனா தடுப்பூசி தற்போது இந்தியாவில் பெரும்பாலான மக்களுக்குப் போடப்பட்டுவிட்டது. கொரோனாவும் இந்தியாவில் குறையத் தொடங்கியது, மக்கள் கொரோனவை மறந்து இயல்புக்குத் திரும்பிய நிலையில் பிரிட்டன் மருத்துவர் தெரிவித்த தகவல் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவுக்கு எதிரான எம்.ஆா்.என்.ஏ தடுப்பூசிகள் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என்று சா்வதேச அளவில் அதிகமானோர் குரலெழுப்பினர். அதில் முக்கியமானவர் பிரிட்டனின் புகழ்பெற்ற இதயநோய் மருத்துவர் அசீம் மல்ஹோத்ரா. இவர் இந்தியாவை பூர்விகமாக கொண்டவர்.
பிரிட்டன் மருத்துவர் அசீம் மல்ஹோத்ரா, “ எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசிகளை விட, கோவிஷீல்ட் தடுப்பூசிகள் மிக மோசமானவை. இவை இதயம், ரத்த நாளங்கள் தொடர்பான பாதிப்புகளை அதிகம் ஏற்படுத்துகின்றன’’ என்று தற்போது தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன் இந்தியா வந்த அசீம் மல்ஹோத்ரா, இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில்,
“எம்.ஆர்.என்.ஏ. மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் குறித்து கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் வரை ஆய்வு செய்யப்பட்டது. அந்த முடிவுகள் ஆய்விதழ் ஒன்றில் வெளியானது. அதில் இரண்டும் ஒன்றுடன் ஒன்று ஒப்பிடப்பட்டு ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அந்த முடிவில், இதயம் மற்றும் ரத்த நாளங்கள் தொடா்பான பாதிப்புகள், மாரடைப்பு, பக்கவாதம், இளவயதினருக்கும் முதியவா்களுக்கும் ரத்தம் உறைவது, சில உயிரிழப்புகள் ஆகியவற்றை ஏற்படுத்துவதில் பைசர் நிறுவனத்தின் எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசியை விட, கோவிஷீல்ட் தடுப்பூசி மிக மோசமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் 97 லட்சம் பேருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதில் சுமார் 8 லட்சம் பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டன. அந்தப் பக்கவிளைவுகள் லேசாகவோ, மிதமாகவோ இல்லாமல் அதிகமாகவே இருந்தன.
கடுமையான பக்கவிளைவுகள் ஏற்பட்டதால் பிரிட்டன் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் கோவிஷீல்ட் தடுப்பூசி பயன்பாட்டுக்கு தடை செய்யப்பட்டது.

| மருத்துவர் அசீம் மல்ஹோத்ரா
இந்தியாவில் அந்தத் தடுப்பூசி பயன்படுத்தப்படுவது உடனடியாக நிறுத்த வேண்டும். அந்தத் தடுப்பூசியின் பாதுகாப்புத்தன்மையை முழுமையாக மறுஆய்வு செய்ய வேண்டும்.
90 சதவீதத்துக்கும் அதிகமான இந்தியர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். அவர்களுக்கு இயற்கையாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது. இயற்கையாக உருவாகும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் ஆற்றல்கொண்டது. அது கடுமையான உடல்நல பாதிப்புகளில் இருந்தும், மரணத்திலிருந்தும் பாதுகாக்கிறது. எனவே, கொரோனா வைரஸ் குறித்து இந்திய மக்களும் அரசும் கவலைப்பட வேண்டாம்.
இனி இந்தியாவில் யாருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டிய அவசியமில்லை. இதேபோல பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டிய தேவையும் இல்லை. தடுப்பூசி தவணைகளை அடுத்தடுத்து செலுத்திக்கொள்ளும்போது கடுமையான பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம்” என்றார்.