சமூக விரோதிகளின் கூடாரமான சென்னை மாநகராட்சி மயான பூமிகள்: பாதுகாப்பை வலுப்படுத்த மேயர் பிரியா உத்தரவு

சென்னை: சென்னை மாநகராட்சி மயான பூமிகளில் பாதுகாவலரை நியமித்தல் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மேயர் பிரியா உத்தரவிட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மயான பூமிகளில் மேற்கொள்ள வேண்டிய உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மேயர் பேசுகையில், “சென்னையில் மாநகராட்சிக்கு சொந்தமான 209 மயானபூமிகள் உள்ளது. இந்த மயானபூமிகளில் உடல்களை எரித்தல் மற்றும் புதைத்தல் சேவைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த இலவச சேவையினை அலுவலர்கள் உறுதிப்படுத்திட வேண்டும். மயான பூமிகளில் நாள்தோறும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ள வேண்டும். மயான பூமிகளில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொள்ளவும் தன்னார்வ அமைப்புகள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் வாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும். இந்த மயான பூமிகளில் சேவைகள் இலவசமாக வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் அதற்குண்டான அறிவிப்புப் பலகைகளை மயானபூமிகளின் வாயிலில் பொதுமக்கள் பார்வைக்கு தெரியும்படி வைக்க வேண்டும். இது குறித்து தகவல்கள் மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in இணையதளத்தில் வெளியிடப்படும்.

மயான பூமியில் நுழைவுப் பகுதியை அழகுபடுத்தி, உட்புறங்களில் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். வரும் பொதுமக்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். சுவரொட்டிகள் ஓட்டுவதைத் தவிர்க்கும் வகையில் அலுவலர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மயான பூமிகளின் பயன்பாடுகளுக்காக தனிச்செயலி உருவாக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும். மயான பூமிகளை பசுமையாகப் பராமரிக்கும் வகையில் மரக்கன்றுகள் நடுதல், நீரூற்றுகள் அமைத்தல் போன்றவை மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தப் பணிகள் அனைத்தையும் மார்ச் மாத இறுதிக்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இரவு நேரங்களில் ஒரு பாதுகாவலரை நியமித்தல், கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று அவர் அறிவுறுத்தினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.