திருமலை : தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள புத்தகங்களை தெலுங்கில் மொழிபெயர்த்து மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தான இணை செயல் அதிகாரி சதா பார்கவி உத்தரவிட்டுள்ளார். திருப்பதியில் உள்ள பத்மாவதி ஓய்வு இல்லத்தில் தேவஸ்தான கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து இணை செயல் அதிகாரி சதாபார்கவி ஆய்வு செய்தார். அப்போது, அவர் பேசியதாவது:
தேவஸ்தான கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு மன அழுத்தமில்லாத கல்வியை வழங்க பாடுபட வேண்டும். பள்ளிகள், இளநிலை மற்றும் பட்டய கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் அடிப்படை வசதிகளுடன் மேம்படுத்த வேண்டும். இதனால், மாணவர்களிடமிருந்து நல்ல தேர்ச்சி விகிதம் கிடைக்கும்.
ஜியோ நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட மாணவர் மென்பொருளை அனைத்து கல்வி நிறுவனங்களிலும் செயல்படுத்தி சிறப்பு வகுப்புகள் மற்றும் படிப்பு நேரங்களை ஏற்பாடு செய்து, சிறப்பான தேர்ச்சி விகிதம் அடைய திட்டமிட்ட வகையில் செயல்படுத்த வேண்டும். இதற்காக கல்வியில் பின்தங்கியவர்களை கண்டறிந்து அவர்களை மேம்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும். நடப்பு கல்வியாண்டிற்கு இன்னும் 3 மாதங்களே உள்ள போதிலும் மாணவர்களுக்கு ஊக்கம் மற்றும் ஆளுமை மேம்பாட்டு வகுப்புகள் நடத்த வேண்டும். இதற்கு திறமையான பயிற்சியாளர்களை பயன்படுத்த வேண்டும்.
சிற்பக்கலை பள்ளியில் ஆண்டுக்கு 3 முறையாவது மாணவர்கள் தயாரித்த சிற்ப கண்காட்சி நடத்த வேண்டும். இது மாணவர்களின் திறமைகளை மேம்படுத்த உத்வேகத்தை அளிக்கும். தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்திலிருந்து புத்தகங்களை கொண்டு வந்து தெலுங்கில் மொழிபெயர்த்து கற்பிப்பதன் மூலம் மாணவர்களின் திறன்களை மேம்படுத்த முடியும். சிற்ப கல்லூரியின் சுற்றுச்சுவர் மற்றும் அலங்கார வளைவு கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். எஸ்வி நாட்டிய மற்றும் சங்கீத, நாதஸ்வர கல்லூரியில் முக்கிய இசை மகான்களின் பிறந்தநாள், நினைவு தின நிகழ்ச்சிகளை முறையாக நடத்த வேண்டும். இதற்கான மேடை தேவைக்கேற்ப உருவாக்க வேண்டும். மாணவிகளின் திறன்களை மேம்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
பத்மாவதி மகிளா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி அளிக்க வேண்டும். சிறந்த வேலை வாய்ப்புகளை பெறவும், பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும். அனைத்து கல்லூரிகளிலும் மென் திறன்களை மேம்படுத்த பயிற்சி அளிக்க வேண்டும். டிகிரி மற்றும் ஜூனியர் கல்லூரிகள் மற்றும் காது கேளாதோர் மற்றும் இசை கல்லூரிகள் தொடர்பாக நிலுவையில் உள்ள தணிக்கை ஆட்சேபனைகளை மதிப்பாய்வு செய்ய வேண்டும். அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் செய்தி மடல் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதன் மூலம் மாணவர்களின் திறமை வெளிப்படும். அனைத்து கல்வி நிறுவனங்களிலும் நற்பெயரை அடைய ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கடுமையாக கூட்டு முயற்சியுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.