நலன்புரி நன்மைகள் சபையின் தரவுக் கணக்கெடுப்பு தொடர்பான மீளாய்வுக் கூட்டம்

நலன்புரி நன்மைகள் சபையின் தரவுக் கணக்கெடுப்பு தொடர்பான மீளாய்வுக் கூட்டம் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் நேற்று (09) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களையும் குறைந்த வருமானம் பெறுபவர்களையும் கண்டறிந்து அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை விரைவாக வழங்குவதே இதன் நோக்கமாகும்.

நலன்புரி நன்மைகளை வழங்கும்போது வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும். அதற்கு தகுதியானவர்களை அடையாளம் காண்பது சமூகப் பாதுகாப்பு நன்மைகள் குறித்த பதிவேடு ஒன்றை தயாரிப்பது என்பன நலன்புரி நன்மைகள் சபையின் பிரதான பணிகளாகும்.

நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் இந்த தரவுக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், தற்போது 23 பிரதேச செயலகப் பிரிவுகளின் தரவு கணக்கெடுப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் இதன்போது தெரியவந்துள்ளது.

எதிர்வரும் செவ்வாய்கிழமை நடைபெறவுள்ள மாவட்டச் செயலாளர்களது கூட்டத்தில் இது குறித்து நீண்ட கலந்துரையாடலை முன்னெடுக்க இருப்பதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

இந்நலன்புரி நன்மைகள் வேலைத்திட்டத்துக்காக உலக வங்கி அவசியமான தொழில்நுட்ப உதவிகள் உள்ளிட்ட முழுமையான ஆதரவை வழங்கி வருகின்றன.

உலக வங்கியின் பிரதிநிதிகளை தொடர்பு கொண்டு இந்த வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து அவர்களுக்கு அடிக்கடி தெரியப்படுத்துமாறும் சாகல ரத்நாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

பொருளாதார விவகாரங்கள் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச். எஸ் சமரதுங்க, உலக வங்கியின் வதிவிட முகாமையாளர் சியோ கந்தா (Chiyo Kanda) , உலக வங்கியின் சிரேஷ்ட பொருளாதார நிபுணர் ரிச்சர்ட் வோக்கர் (Richard Walker) உள்ளிட்ட உலக வங்கி மற்றும் நிதியமைச்சின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

President’s Media Division

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.