விழுப்புரம் மாவட்டத்தில், ஆன்மிகச் சிறப்பு பெற்ற ஆலயங்களுள் ஒன்று ‘அருள்மிகு மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயம்’. செஞ்சியில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது.
இத்தலத்தில் வீற்றிருக்கும் அம்மன், புற்று மண்ணால் சுயம்புவாக உருவானவள் என்கிறது தல வரலாறு. நான்கு திருக்கரங்களுடன், இடதுகாலை மடித்து, வலதுகாலைத் தொங்கவிட்டபடி, பிரம்ம கபாலத்தை மிதித்தவாறு, வடக்கு திசை நோக்கி அருட்காட்சி புரிகிறார் அம்மன். புற்று வடிவில் தோன்றிய இந்த அம்மனுக்கு ‘புற்று தேவி’ என்றும் பெயருண்டு. பிரம்மனுடைய ஐந்தாவது சிரத்தைத் தன் கரங்களால் கொய்ததால் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது. அதோடு, பிரம்ம கபாலமும் சிவனின் கையிலேயே ஒட்டிக்கொண்டது.

மேலும், சரஸ்வதி தேவியின் சாபத்தினால், தற்போது மேல்மலையனூர் என அழைக்கப்படும் பகுதியில் புற்றில் பார்வதிதேவியும்; உணவுத்தேடி அலையும் கோலத்தில் சிவபெருமானும் சில காலம் வாழ நேர்ந்தது. விஷ்ணுவின் ஆலோசனைப்படி, ஒரு தினம் சிவபெருமானின் வருகையை அறிந்தார் பார்வதிதேவி. அன்று, அன்னபூரணி மூலமாக சுவையான உணவினைச் சமைத்து அதை மூன்று கவளமாகப் பிரித்து, இரண்டு கவளங்களை சிவபெருமான் கரங்களில் இருந்த கபாலத்திற்கு ஊட்டினார்.
உணவின் சுவையில் மயங்கிப்போனது அந்த கபாலம். மூன்றாவது கவளத்தை வேண்டுமென்றே பார்வதிதேவி கீழே தவற விட, சுவையில் மயங்கிய கபாலம் உணவை உட்கொள்ளக் கீழே இறங்கியது. அப்போது, அந்தக் கபாலத்தைத் தன் காலால் நசுக்கி அழித்தாராம் பார்வதிதேவி. இதனால் சிவபெருமானுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்கிவிட, இருவரும் தம் சுய உருவினை அடைந்தனர் எனக் கூறுகிறது தலவரலாறு. இதன் நினைவாகவே மயானக்கொள்ளை திருவிழா இங்கு சிறப்பாக நடைபெறுகிறது என்கிறார்கள் பக்தர்கள்.

கோபத்திலிருந்த அங்காளம்மனை சாந்தப்படுத்தும் நிகழ்வாகவே தேர்திருவிழாவும், அமாவாசை தினங்களில் ஊஞ்சல் நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறதாம். அதன்படி, மாசிமாதம் அமாவாசை அன்று மேல்மலையனூர் மயானத்தில் நடைபெறும் மயானக்கொள்ளை திருவிழா பிரசித்தி பெற்றதாகப் பார்க்கப்படுகிறது. அங்காளபரமேஸ்வரி அம்மனின் மீதுள்ள பக்தியாலும், பிரசித்திபெற்ற இந்தத் திருவிழாவைக் கண்டுகளிப்பதற்காகவும், தங்களின் நேர்த்திக் கடனைச் செலுத்துவதற்காகவும் தமிழகம் மட்டுமன்றி பிற மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் அன்றைய தினத்தில் இங்கு குவிவார்கள்.
இந்த ஆலயத்தில் அம்மனை வணங்கி வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள், மயானக்கொள்ளை தினத்தில் காய் – கனிகள், கொழுக்கட்டைகள், கீரைகள், சில்லரை ரூபாய்கள், தானியங்கள் என பலவகை பொருள்களை வீசி எறிந்து கொள்ளை விடுவார்கள். மேல்மலையனூர் மயானத்தில் திருவிழா முடிந்ததும், அந்த மயானச் சாம்பலை எடுத்துச் சென்று தங்கள் வீடுகளில் துணியில் முடிந்துக்கட்டி வாசலில் தொங்கவிட, தீய சக்திகள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஒவ்வோர் ஆண்டும் மாசி மாதம் மகா சிவராத்திரியிலிருந்து 13 நாள்கள் இந்தப் பெருந்திருவிழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் கீழ்க்காணும் தேதிகளில், மாசிப்பெருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது.

மாசி மாதம் 6-ம் தேதி (18.2.2023) தொடங்கி, மாசி மாதம் 18-ம் தேதி (2.3.2023) வரை நடைபெறும் இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகள் பின்வருமாறு.
மாசி 6 (18.2.2023) – கொடியேற்றம்,
மாசி 7 (19.2.2023) – மயானக்கொள்ளை,
மாசி 10 (22.2.2023) – தீமிதி விழா உற்சவம்,
மாசி 12 (24.2.2023) – திருத்தேர் வடம் பிடித்தல் உற்சவம்,
மாசி 15 (27.2.2023) – அம்மன் தெப்ப உற்சவம்,
மாசி 18 (02.3.2023) – காப்பு களைதல்.
பிரசித்திபெற்ற இந்த மாசித் திருவிழாவில் கலந்துகொண்டு மேல்மலையனூர் அம்மனை மனமுருக வேண்டி நல் பயனைப்பெறுவோம்.
ஆண்டுதோறும் மாசி மாதம் மகா சிவராத்திரியிலிருந்து 13 நாள்கள் மாசி பெருந்திருவிழா மேல்மலையனூர் கோயிலில் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் 13 நாள்கள் (18.2.2023 முதல் 2.3.2023) மாசித்திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது.