புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் நாடாளுமன்ற உரை ஆணவமானது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார்.
குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் உரை மீது பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தினார். கடந்த புதன் கிழமை மக்களவையிலும், வியாழக்கிழமை மாநிலங்களவையிலும் அவர் உரையாற்றினார். இந்நிலையில், அவரது உரையை மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”பிரதமர் நரேந்திர மோடி தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்.
இந்த அரசுக்கு எதிராக நாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கவில்லை. வேலைவாய்ப்பின்மை குறித்தோ, பணவீக்கம் குறித்தோ, அதானி விவகாரம் குறித்தோ அவர் பேசவில்லை. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது. இது குறித்தும் பிற விவகாரங்கள் குறித்தும் பிரமதர் மோடி பேசவில்லை. அவரால் மட்டும்தான் நாட்டை காப்பாற்ற முடியும் என அவர் கூறி இருக்கிறார். இது ஆணவமான பேச்சு” என தெரிவித்தார்.