பெரம்பலூர் மாவட்டத்தில் தாத்தா வீட்டிற்கு சென்ற சிறுவன் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் வடக்கு மாதவி ஏரிக்கரை தெரு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சத்யா. இவர்களது மகன் சுதர்சன்(5). இந்நிலையில் சத்தியா தனது மகனுடன் அனுக் கூர்குடிக்காடு காட்டு கொட்டகையில் உள்ள தந்தை வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்பொழுது நேற்று காலை வீட்டு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சுதர்சன் திடீரென மாயமானான். இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் மற்றும் உறவினர்கள் சிறுவனை அப்பகுதியில் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் சுதர்சன் கிடைக்கவில்லை.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள கிணறு அருகே சிறுவனின் செருப்பு மற்றும் விளையாட வைத்திருந்த பொம்மை கீழே கிடந்துள்ளது. இதைப் பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றுக்குள் இறங்கி சிறுவனை தேடினர்.
இதைத்தொடர்ந்து நீண்ட நேரம் போராட்டத்திற்குப் பிறகு சுதர்சன் பிணமாக மீட்கப்பட்டான். இதையடுத்து சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து, தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.