`17.74 கிலோ தங்கம் சிக்கியது இப்படிதான்!' – கடல்வழி கடத்தலின் `பரபர' பின்னணி பகிரும் அதிகாரிகள்

ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை வழியாக தமிழகத்துக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் கடத்தப்படவிருப்பதாக சென்னை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு கடந்த 6-ம் தேதி ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இந்த நிலையில், கடந்த 8-ம் தேதி நள்ளிரவு தனுஷ்கோடியிலிருந்து படகு ஒன்று அதிவேகமாக மண்டபம் கடற்கரை நோக்கி வருவதை, ரேடார் மூலம் கண்டறிந்திருக்கின்றனர் இந்தியக் கடற்படையினர். உடனே அதிவேகமாகச் செல்லக்கூடிய சிறிய வகை படகு மூலம் ரேடார் சிக்னலை பின் தொடர்ந்து சென்றிருக்கின்றனர்.

அப்போது, அதிவேக திறன் கொண்ட இரண்டு இன்ஜின்கள் பொருத்தப்பட்ட நாட்டுப்படகு ஒன்று வேகமாக செல்வதைப் பார்த்த கடற்படையினர், நாட்டுப்படகை நிறுத்துமாறு ஒலிபெருக்கி மூலம் எச்சரித்திருக்கின்றனர். ஆனால், நாட்டுப்படகில் இருந்தவர்களோ, திடீரென படகிலிருந்து பார்சல் ஒன்றை கடலுக்குள் வீசி எறிந்துவிட்டு, படகின் வேகத்தை அதிகப்படுத்தியிருக்கின்றனர். இதையடுத்து அந்த நாட்டுப்படகை சுமார் மூன்று நாட்டிக்கல் மைல் தூரம் விரட்டிச்சென்று சுற்றி வளைத்தனர்‌.

பின்னர் படகிகிருந்த மரைக்காயர்பட்டணம் பகுதியைச் சேர்ந்த நாகூர் கனி, மண்டபம் பகுதியைச் சேர்ந்த அன்வர் அலி, மன்சூர் அலி ஆகிய மூன்று பேரைப் பிடித்து விசாரணை செய்தனர். இதில், இலங்கையிலிருந்து பார்சலில் தங்கக்கட்டிகளைக் கடத்தி வந்ததும், கடற்படையினர் விரட்டி வந்ததால், பின்னர் தேடி எடுத்துக்கொள்ளலாம் என கடலில் வீசியதும் தெரியவந்தது.

இதையடுத்து, கடலில் வீசப்பட்ட தங்கத்தைத் தேடி ‘ஸ்கூபா டைவிங்’ வீரர்கள் கடலில் இறக்கிவிடப்பட்டனர். தேடுதல் வேட்டையின் இரண்டாவது நாளில், ஆழ்கடலில் துணியால் சுத்தப்பட்டு கிடந்த தங்கக்கட்டி பார்சலை மீட்டு வெளியே கொண்டு வந்தார் ஆழ்கடல் நீச்சல் வீராங்கனையான ‘ஜுனா ஓரம்’. பார்சலுக்குள் தங்கக்கட்டிகள், தங்க கம்பிகள், செயின், மோதிரம், வெள்ளி காப்புகள் என ரூ.10.50 கோடி மதிப்புள்ள 17.74 கிலோ தங்கம் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.

கடற்படை விசாரணை அதிகாரியிடம் இது குறித்துப் பேசியபோது, “கடத்தப்பட்ட தங்கக்கட்டி பார்சலில் சிறிய ஜி.பி.எஸ் டிராக்கர் கருவியைப் பொருத்தியிருக்கின்றனர். ஒருவேளை தாங்கள் சிக்கிக் கொண்டாலும், தங்கம் சிக்கிவிடக்கூடாது என்ற முன்னேற்பாட்டுடன் ‘ஹைடெக்’காக கடத்தி வந்திருக்கின்றனர். மீட்கப்பட்ட சிறிய பார்சல்கள் ஒவ்வொன்றும் தனித்தனி வியாபாரிகளுக்கு கொடுப்பதற்காக எடைக்கணக்கில் பிரித்து சிவப்பு, பச்சை, நீலம், கறுப்பு என அடையாள ஸ்டிக்கர்களை ஒட்டியிருக்கின்றனர்.

நடுக்கடலில் தங்கத்தை தேடிய கடற்படை

இலங்கையிலிருந்து இந்த தங்கக்கட்டிகளைக் கொடுத்து அனுப்பிய சர்வதேச கடத்தல் கும்பல் குறித்தும், கடத்தல் தங்கத்தை வாங்க இருந்த வியாபாரிகள் குறித்தும் பிடிபட்ட முக்கிய குற்றவாளியிடம் புலனாய்வுத் துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொள்வதற்காக அழைத்துச் சென்றனர். விசாரணையில் தமிழகத்தில் தங்கக்கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய நபர்கள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கிறோம்” என்றவர், இலங்கைக்கு எங்கிருந்து தங்கம் கடத்தி வரப்படுகிறது, கடத்தல் கும்பலின் நெட்வொர்க் எப்படி செயல்படுகிறது என சில தகவல்களை நம்மிடம் பகிர்ந்தார். “கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் சாட்டிலைட் போன் வைத்திருப்பார்கள், லொகேஷனை கண்டுபிடிக்க அதிநவீன கருவிகளைப் பயன்படுத்துவார்கள் என பெரும்பாலானோர் நினைக்கின்றனர். ஆனால், அவர்கள் அந்த அளவுக்குப் பெரிய அளவில் சிந்திக்க மாட்டார்கள். சாதாரணமாக கடத்தல் பொருள்களை கை மாற்றுவதற்கு நாம் எல்லோரும் பயன்படுத்தும் மெயில், கூகுள் மேப்பைத்தான் அவர்களும் பயன்படுத்துவார்கள். பறந்து விரிந்து காணப்படும் கடலை தங்கள் கடத்தல் தளமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

கூகுள் மேப்பை பொறுத்தவரை தரையும் கடலும் ஒன்றுதான். துபாய், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இலங்கைக்கு தங்கத்தைக் கடத்தி வரும் மாஃபியா கும்பல், எவ்வளவு தங்கம் கடத்தியிருக்கிறார்கள் என்ற தகவலை போலி மெயில் ஐ.டி-யை உருவாக்கி இந்தியா முழுவதுமிருக்கும் தங்கள் ஏஜென்ட்டுகளுக்கு அனுப்பிவிடுவார்கள். அதனைப் பார்த்து தங்களுக்கு எவ்வளவு தங்கம் வேண்டும் என்பதை அதே மெயிலுக்கு பதில் அனுப்புவார்கள். பின்னர் தங்கத்தை கடல் மார்க்கமாக கைமாற்றிக் கொள்வார்கள்.

கடலிலிருந்து மீட்கப்பட்ட கடத்தல் தங்கம்

கடத்தல் பொருள்கள் சம்பந்தப்பட்ட நபருக்கு சென்று சேரும் வரை, அவற்றை கண்காணிக்க மட்டுமே ஜி.பி.எஸ் டிராக்கரை பயன்படுத்துகின்றனர். சொற்ப அளவில் மட்டுமே எங்களிடம் கடத்தல் பொருள்கள் சிக்குகின்றன. ஆனால் இந்தியா முழுவதும் தினமும் கோடிக்கணக்கான மதிப்புடைய பொருள்கள் கடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் 20 சதவிகிதம் கடல் பரப்பு கொண்டதாக இருப்பதால், தமிழகத்திலிருந்து இலங்கைக்கும், இலங்கையிலிருந்து தமிழகத்துக்கும் கடத்தல் பொருள்களைக் கைமாற்றும் முனையமாக ராமநாதபுரத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்திய அரசு நினைத்தால் மட்டும் இதனை தடுத்து நிறுத்த முடியாது, இலங்கை அரசும் இதற்கு ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே கடத்தல் சம்பவங்களை முழுவதுமாக தடுத்து நிறுத்த முடியும்” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.