நெல்லை: அஞ்சல் துறையில் 41 ஆயிரம் காலி பணியிடங்களுக்கு வருகிற பிப்.16க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என வேலைவாய்ப்பு துறை தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அஞ்சல் துறையில் நாடு முழுவதும் காலி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
இந்தத் துறையில் காலியாக உள்ள 40 ஆயிரத்து 889 கிளை அஞ்சல் அலுவலர், உதவி கிளை அஞ்சல் அலுவலர் மற்றும் அஞ்சல் பணியாளர் ஆகிய காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் 3 ஆயிரத்து 167 காலிப்பணியிடங்கள் தமிழ்நாட்டிற்கு மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் சலுகையும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை வழங்கப்படுகிறது. இந்த காலிப் பணியிடங்களுக்கு 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும். இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 16.02.2023 கடைசி தேதி ஆகும். மேலும் விவரங்களை http://www.indiapostgdsonline.gov.in இணையதளத்தில் தெரிந்துகொண்டு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.