சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறியதாவது:
பணப்பட்டுவாடா குறித்து புகார்கள் வந்ததை தொடர்ந்து, 6 பறக்கும் படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை அத்தொகுதியில் ரூ.25.43 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாகன சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. சோதனைச் சாவடிகள் மூலம் 24 மணிநேரமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பணப் பட்டுவாடா குறித்து புகார் வந்தால், உடனடியாக அந்த இடத்துக்கு செல்ல பறக்கும் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
ஏற்கெனவே பாதுகாப்பு பணிக்கு 2 கம்பெனி துணை ராணுவப் படையை தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள நிலையில், மேலும், கூடுதலாக 3 கம்பெனி துணை ராணுவப் படையினரை அனுப்ப முடிவெடுத்து தகவல் தெரிவித்துள்ளது.
அதிமுக சார்பில் 5 வாக்குச்சாவடிகளை குறிப்பிட்டு தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியலை சரிபார்த்ததில் அனைத்தும் சரியாகவே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.