தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மாணவர் ஒருவர், சேலம் மத்திய சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்தார். இவர் சின்னகொல்லப்பட்டி என்ற இடத்தில் நண்பர்களுடன் வாடகைக்கு அறை எடுத்து தங்கி உள்ளார். இந்த நிலையில் சேலம் மத்திய சட்டக் கல்லூரியில் பயின்று வரும் பெண்ணுடன் சஞ்சய்க்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. அந்த பெண் சின்னக்கொல்லப்பட்டி பகுதியில் தாய் மற்றும் தங்கையுடன் தங்கியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2 நாள்களுக்கு முன் நள்ளிரவில் தனது காதலியை பார்ப்பதற்காக காதலி தங்கியிருந்த அப்பார்ட்மென்ட்க்கு சஞ்சய் சென்றுள்ளார். அப்போது மொட்டை மாடியில் இருவரும் தனிமையில் இருந்துவந்துள்ளனர். அப்போது திடீரென காதலியின் அம்மா மகளை காணாமல் தேடிவந்து மாடிக்கு சென்று பார்த்துள்ளார். அங்கு இருவரும் ஒன்றாக இருந்ததைக்கண்டு அதிர்ச்சியாகி சத்தமிட்டுள்ளார்.

அப்போது சஞ்சய் தப்பிக்க முயற்சித்தபோது, 50 அடி உயர மொட்டைமாடியில் இருந்து சஞ்சய் குதித்துள்ளார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பெயரில் விரைந்து வந்த காவல்துறையினர் இறந்த மாணவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து இறந்த மாணவனின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மாணவனின் இறப்பு குறித்து கன்னங்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.