திமுக ஆட்சியின் அராஜகங்களுக்கு முடிவுகட்டும் காலம் வெகு விரைவில் வரும்: இபிஎஸ்

சென்னை: திமுக ஆட்சியின் அராஜகங்களுக்கு முடிவுகட்டும் காலம் வெகு விரைவில் வரும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, தனது நிர்வாகத் திறமையின்மை காரணமாக பொதுமக்கள் உள்ளிட்ட அப்பாவித் தொழிலாளர்கள் பல்வேறு வகைகளில் வஞ்சிக்கப்பட்டு வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.

அந்த வகையில், கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் எவ்விதக் காரணமும் இன்றி பழிவாங்கப்படுவது, அச்சுறுத்தப்படுவது, பணியிட மாற்றம் செய்யப்படுவது, பணி நீக்கம் செய்யப்படுவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து திமுக அரசையும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சரையும் கண்டித்து, கோவை மாவட்ட டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பாக நேற்று (பிப்.11), மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு காவல் துறையிடம் முறையாக அனுமதி பெறப்பட்டிருந்தது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஐஎன்டியூசி மற்றும் பாமகவைச் சேர்ந்த தொழிற்சங்கத்தினரும் பங்கேற்ற நிலையில், காவல் துறையினர் நேற்று காலை ஆர்ப்பாட்டத்திற்கான அனுமதி ரத்து செய்யப்படுவதாகத் தெரிவித்து, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்திருந்த, கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் கமலக்கண்ணன் உள்ளிட்ட தொழிலாளர்களை சட்ட விரோதமாகக் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்துவைத்து மாலையில் விடுவித்துள்ளனர்.

திமுக அரசின் இத்தகைய அராஜக செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன், திமுக ஆட்சியில், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பல்வேறு வகைகளில் ஊழல்கள், அராஜகங்கள், வன்முறைச் செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கெல்லாம் முடிவுகட்டும் காலம் வெகு விரைவில் வரும் என்பதை திமுக அரசின் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.