“திரிபுரா மக்களை ஏழ்மையில் தள்ளியவர்கள் காங்கிரஸ், இடதுசாரிகள்” – பிரதமர் மோடி

ராதாகிஷோர்பூர்: திரிபுராவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸும், இடதுசாரிகளும் அம்மாநில மக்களை ஏழ்மையில் தள்ளியதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தல்: திரிபுராவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளுக்கு வரும் 16-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, திரிபுராவில் ராதாகிஷோர்பூர் மாவட்டத்திலும், தலாய் மாவட்டத்திலும் பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியது: ”திரிபுராவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸும், இடதுசாரிகளும் ஏழைகள், மலைவாழ் மக்கள், பெண்கள், இளைஞர்கள் ஆகியோரின் கனவுகளை நொறுக்கினார்கள். அவர்கள் மக்களை ஏழ்மையில் தள்ளினார்கள். அவர்களின் ஆட்சியில் மின்சாரமும் குடிநீரும்கூட கிடைப்பது அரிதாக இருந்தது.

திரிபுராவில் பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 5 ஆண்டுகளில் மாநிலம் மிகப் பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது. பின்தங்கி இருந்த ஆயிரக்கணக்கான கிராமங்கள் தற்போது வளர்ச்சி பெற்று வருகின்றன.

5 ஆயிரம் கிராமங்களுக்கு சாலை வசதி வழங்கப்பட்டுள்ளது. கிராமங்கள் நகரங்களோடு இணைக்கப்பட்டுள்ளன. பாஜக மீது மக்கள் நம்பிக்கை வைத்ததால் இது சாத்தியமானது. மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சியில் இருப்பதால் இரட்டை இன்ஜினின் வளர்ச்சியை திரிபுரா பார்த்துக்கொண்டிருக்கிறது.

திரிபுரா தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணிக்க பாஜகவை மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒவ்வொரு வாக்கும் பாஜகவுக்கு சென்று சேர்வதை நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும். உங்கள் வாக்குகள் மதிப்பு மிக்கவை. சரியானவர்களைத் தேர்வு செய்ய வாக்களியுங்கள்.

இடதுசாரிகள் ஆட்சியில் இருந்தபோது அவர்கள் காவல் நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். மக்களிடம் இருந்து கட்டாய வசூல் வேட்டை நடத்தப்பட்டது. மக்கள் மிகுந்த அச்சத்தில் தள்ளப்பட்டார்கள். ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு காவல் துறை சுதந்திரமாக செயல்படத் தொடங்கியது. மக்களின் அச்சம் போக்கப்பட்டுள்ளது” என்று அவர் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.