புதுச்சேரியில் என்.ஆர். காங். – பாஜக  கூட்டணி எப்போது வேண்டுமானாலும் பிரியலாம்: நாராயணசாமி கணிப்பு

புதுச்சேரி: “புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி கட்டாயத் திருமணம் போன்றது. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் பிரியலாம்” என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் புதுச்சேரி வைசியால் வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: “அதானி குழும விவகாரத்தில் மக்களவையில் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களின் கேள்விக்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் அளிக்காதது ஜனநாயகத்தை அவர் மதிக்கவில்லை என்பதையே காட்டுகிறது. ஆகவே, உச்ச நீதிமன்ற மேற்பார்வையிலோ அல்லது மக்களவை நிலைக்குழுவின் மூலமோ அதானி குழும விவகாரத்தை விசாரிக்க வேண்டியது அவசியம். விசாரணையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அதானி குழுமத்துடனான தொடர்புகள் வெளிப்படும்.

புதுச்சேரி – காரைக்கால் துறைமுகத்தையும் மறைமுகமாக அதானி குழுமம் வாங்கியுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கிருந்தும், புதுச்சேரி அரசைக் கலந்தாலோசிக்காமலே குறிப்பிட்ட நிலம் அக்குழுமத்துக்கு விற்கப்பட்டுள்ளது. ஆகவே அதுகுறித்தும் விசாரிக்கப்படவேண்டும்.

புதுச்சேரி அரசுக்கு மத்திய பாஜக அரசானது, நடப்பாண்டில் ரூ.3,251 கோடி நிதி அளித்திருப்பதாக முதல்வரும், அமைச்சர்களும் பெருமைப்படுவது சரியல்ல. புதுச்சேரி மாநிலத்துக்கான ஜிஎஸ்டி பங்கு, ஏழாவது ஊதியக்குழு ஆகியவற்றை சேர்த்தே நிதி வழங்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அரசிடமிருந்து 28 சதவீத நிதி பெறப்பட்ட நிலையில் தற்போது 22 சதவீத நிதி மட்டுமே பெறப்படுகிறது. மத்திய அரசு புதுச்சேரிக்கு சிறப்பு நிதியாக ரூ.1,400 கோடி அளித்ததாக சட்டப்பேரவைத் தலைவர், முதல்வர் கூறியது குறித்து விளக்க வேண்டும். மத்திய அரசானது, புதுச்சேரிக்கு அளித்த நிதி குறித்து முதல்வர், அமைச்சருடன் மேடையில் நேருக்கு நேர் விவாதிக்க நான் தயாராக உள்ளேன். அவர்கள் தயாரா என்பதைக் கூறவேண்டும். புதுச்சேரி மாநிலத்துக்கு தனிக் கணக்கை ரங்கசாமி முதல்வராக இருந்தபோதுதான் தொடங்கினார் என்பதை பாஜகவினர் உணரவேண்டும்.

காரைக்காலில் ரயில்வே, நெடுஞ்சாலைத் திட்டத்துக்கு ஏரியில் மண் அள்ளுவதில் முறைகேடு நடக்கிறது. அதில் அமைச்சர் குடும்பத்துக்கும் தொடர்புள்ளது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி கட்டாயத் திருமணம் போன்றது. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் பிரியலாம்” என்றார்.

காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் கூறுகையில், “அதானி குழும விவகாரத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்று பதவி விலகவேண்டும். இப்பிரச்சினையை காங்கிரஸ் தொடர்ந்து மக்கள் மத்தியில் கொண்டு செல்லும்” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.