சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் தனிப்பிரிவில் தலைமைச் செயலர் வெ.இறையன்பு நேற்று காலை திடீரென ஆய்வு செய்து, வெளியூரில் இருந்து வந்தவர்கள் அளித்த மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்.
சென்னை, தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற துறைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில், திட்டங்களின் செயல்பாடுகளை தலைமைச் செயலர் மாதந்தோறும் ஆய்வு செய்ய வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியிருந்தார்.
இதுதவிர, தலைமைச் செயலரே அவ்வப்போது பல்வேறு பகுதிகளுக்கு சென்று கள ஆய்வு மற்றும் துறை செயலர்களுடன் ஆய்வு நடத்தி வருகிறார்.
இந்நிலையில், நேற்று காலை தலைமைச் செயலகம் வந்த தலைமைச் செயலர் வெ.இறையன்பு, முதல்வர் தனிப்பிரிவில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அவருடன் பொதுத்துறை செயலர் டி.ஜகந்நாதன், முதல்வரின் முகவரித் துறை தனி அதிகாரி ராம்பிரதீபன் ஆகியோர் இருந்தனர்.
அப்போது, முதல்வர் தனிப்பிரிவு அலுவலரிடம், வெளி மாவட்ட புகார் மனுவை கேட்டு பெற்ற தலைமைச் செயலர், அந்த மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் கோரினார்.
குறிப்பிட்ட மனு சேலம் மாவட்டத்தில் இருந்து வந்துள்ளதையும், அது மாவட்ட எஸ்பிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்க, அந்த மனுவின் நகலைப் பெற்ற தலைமைச் செயலர், இந்த மனு தொடர்பாக தான் விசாரித்துள்ளதாகவும், எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான தகவல்களை தனக்கு தெரிவிக்கும்படி எஸ்பியிடம் கூறும்படியும் தெரிவித்தார்.
தொடர்ந்து, புகார் அளிக்கவரும் பொதுமக்களுக்கான வசதிகள் குறித்து கேட்டறிந்த தலைமைச் செயலர், யாரையும் குறிப்பாக மாற்றுத் திறனாளிகள், முதியவர்களை நிற்க வைக்காமல், அவர்ளுக்கு முன்னுரிமை அளித்து மனுக்களை பெற வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், தலைமைச் செயலகம் எதிரில் உள்ள வாகன நிறுத்துமிடம் பகுதிக்கு சென்ற அவர், அங்கு வாகன நிறுத்தம் அமைக்கும் பணிகளையும் ஆய்வு செய்தார்.