சேலம்: சேலம் மாவட்டம் கெங்கவல்லி அடுத்த கூடமலையை சேர்ந்த 16 வயது மாணவி, அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த புதன்கிழமை மாலை, வீட்டில் படிக்காமல் செல்போனை நீண்ட நேரம் மாணவி பார்த்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்ட அவரது பெற்றோர், படிக்காமல் செல்போனையே பார்த்து கொண்டிருப்பாயா? என கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு வந்த மாணவி, மதியம் 12 மணியளவில் திடீரென வகுப்பறையில் மயங்கி விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவிகள், ஆசிரியருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் மாணவியை மீட்டு, அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு மருத்துவர் பரிசோதனை மேற்கொண்ட போது, பெற்றோர் கண்டித்ததால் எறும்பு மருந்தை சாப்பிட்டு விட்டதாக மாணவி கூறியுள்ளார்.
இதையடுத்து, அவரை மேல்சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கெங்கவல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.