நாமக்கல்லில் தனியார் பள்ளி ஒன்றில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை பல்வேறு மாநிலங்களில் இருந்து சி.பி. எஸ்.இ. பள்ளி மாணவர்கள் பங்கேற்ற டேக்வாண்டோ போட்டிகள் நடைபெற்றன. இதில் 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதற்காக அந்த பள்ளி வளாகத்தில் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த போட்டியில் பங்கேற்க கோவையில் உள்ள தனியார் பள்ளியின் 16 வயது +1 மாணவி தனது தந்தையுடன் வந்திருந்தார். இதனிடையே தெலுங்கானா மாநிலத்தில் இருந்து மாணவி ஒருவருடன் பயிற்சியாளராக அங்கோத்து லக்ஸ்மன் (24) என்பவரும் வந்திருந்தார்.
இவர் கோவையிலிருந்து வந்திருந்த +1 மாணவியிடம், ‘நீ அழகாக இருக்கிறாய். உனக்கு நன்கு பயிற்சி அளித்து அதிக பதக்கங்களை பெற வைக்கிறேன்“ என கூறி, தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியதாக தெரிகிறது. அதற்கு மாணவி மறுத்துள்ளார். இதனிடையே டிசம்பர் 9ம் தேதி இரவு 9 மணியளவில் தனது தந்தையை பார்க்க ஆண்கள் விடுதிக்கு மாணவி சென்றுள்ளார். அப்போது பயிற்சியாளர் அங்கோத்து லக்ஸ்மன் மாணவியின் கையை பிடித்து இழுத்து ஒரு அறைக்குள் தள்ளி தாக்கியதோடு, கொஞ்சம் அட்ஜஸ் செய்யுமாறு கூறி, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, வெளியே இதை யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளதாக தெரிகிறது. அதற்கு பயந்து மாணவி பெற்றோரிடம் தெரிவிக்காமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் மாணவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மாணவியின் தாயார் கோவையில் உள்ள மருத்துவமனைக்கு மகளை அழைத்து சென்றார். அங்கு பரிசோதனையில் மாணவி 2 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், மாணவியிடம் கேட்டபோது, தெலுங்கானா மாநில பயிற்சியாளர் தன்னை பலாத்காரம் செய்ததாக மாணவி தெரிவித்துள்ளார்.