2003 ல் பணி நியமனம் பெற்ற காவலர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க உயர்நீதிமன்றம் உத்தரவு.! 

சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவசக்தி உள்ளிட்ட 25 காவலர்கள் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தனர். அந்த வழக்கு மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது, “தமிழ்நாடு அரசு “பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்” என்ற புதிய திட்டத்தை கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தியது. 

இது அமலுக்கு வந்தபின்னர், பணி நியமனம் பெற்ற அனைத்து அரசு ஊழியர்களுக்கும் புதிய ஓய்வூதிய திட்டமே பின்பற்றப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஆகவே, கடந்த 2002-ம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பாணையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட தங்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில், இந்த வழக்கை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரணை செய்தபோது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கடந்த 2002-ம் ஆண்டு 3 ஆயிரத்து 500 காவலர்கள் தேர்வு செய்வது தொடர்பான அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மனுதாரர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கூடாது என்று வாதிடப்பட்டது. 

இதற்கு அரசு தரப்பில், கடந்த 2002-ம் ஆண்டு தேர்வு நடைமுறைகள் தொடங்கியிருந்தாலும், 2003-ம் நவம்பர் மாதம்தான் மனுதாரர்கள் பணியில் நியமிக்கப்பட்டனர். அதனால் புதிய ஓய்வூதிய திட்டம்தான் இவர்களுக்கு பொருந்தும். பழைய ஓய்வூதிய திட்ட பலன்களைப் பெற அவர்களுக்கு தகுதியில்லை என்று வாதம் செய்யப்பட்டது. 

இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, கடந்த 2002-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பாணை மூலம் பெண் காவலர்களுக்கு ஓராண்டுக்குள்ளாகவே பணி நியமனம் வழங்கப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தின்கீழ் பலன் பெறுகின்றனர். ஆனால், அதே காலகட்டத்தில் தேர்வு நடைமுறைகளை சந்தித்த ஆண் காவலர்களையும் சமமாக கருத வேண்டும்.

அதுமட்டுமல்லாமல், ஆண் காவலர்கள் நியமனத்திற்கு 11 மாதங்கள் கால தாமதம் ஆனதற்கு அவர்கள் காரணமல்ல. அதனால் அவர்களை பழைய ஓய்வூதிய திட்டத்திலேயே சேர்க்க வேண்டும். இந்த நடைமுறைகளை வரும் 3 மாதங்களுக்குள் செய்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.