2024-ல் இந்தியாவுக்கே விடியல் ஏற்படும் – தயாராக இருக்கும்படி திமுகவினருக்கு ஸ்டாலின் அழைப்பு

சென்னை: கடந்த 2021-ல் தமிழகத்துக்கு விடியல் ஏற்பட்டதுபோல, 2024-ல் இந்தியாவுக்கே விடியலை ஏற்படுத்தும் நிலை வரப்போகிறது. அதற்கு நீங்கள் தயாராக இருங்கள் என்று திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னையில் நேற்று நடைபெற்ற ஒரு திருமண விழாவில் முதல்வர் பேசியதாவது: அண்ணா மறைவுக்குப் பிறகு 1969-ல் முதல்வராக கருணாநிதி பதவியேற்றது பிப்.10-ம் தேதிதான். அதே தேதியில்தான் இந்த திருமணம் நடைபெறுகிறது. திருமண விழாவில் அமைச்சர்கள், தலைமை நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்துகொள்வதாக போடப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலோர் வரவில்லை. காரணம், ஈரோட்டில் நடக்கும் தேர்தல்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில், பிரதமர் எதற்கும் பதில் சொல்ல முடியாத நிலையில் ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று கேட்கிறார். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு குறித்து கேட்கிறார். அதற்கு பதில் இல்லை. வெளிநாட்டில் இருக்கும் கறுப்புப் பணத்தை எல்லாம் கைப்பற்றி, இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.15 லட்சம் வங்கிக் கணக்கில் போடுவேன் என்றார். 15 ரூபாயாவது போட்டார்களா என்றால் இல்லை.

அதேபோல, எய்ம்ஸ் என்ன ஆச்சு, பிரதமர் அடிக்கல் நாட்டி சென்றாரே என கனிமொழி கேட்டுள்ளார். அந்த எய்ம்ஸ் இதுவரை என்ன ஆச்சு என்றே தெரியவில்லை. உதயநிதி ஒரு செங்கலை வைத்துக் கொண்டு தமிழகம் முழுவதும் சுற்றி வந்த செய்தி பார்த்திருப்பீர்கள். நாடாளுமன்றத் தேர்தலின்போது இன்னொரு செங்கலை எடுத்துக் கொண்டு கிளம்பிவிடுவானே என்ற பயமாவது அவர்களுக்கு வர வேண்டாமா?

அதேபோல், ஆ.ராசா கேள்விகளுக்கும் பதில் இல்லை. நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசியதும் அனைவரும் போய்விடுகிறார்கள். ‘கோரம்’ இல்லை என தயாநிதி மாறன் கூறுகிறார். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய நிறைவேற்றப்பட்ட மசோதா பற்றி தமிழச்சி தங்கபாண்டியன் கேட்டால் எது எதற்கோ விளக்கம் சொல்கின்றனர்.

இப்படிப்பட்ட நிலையிலேதான், மத்தியில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. 2021-ல் எப்படி தமிழகத்துக்கு விடியலை ஏற்படுத்திக் கொடுத்தீர்களோ அதேபோல, 2024-ல் இந்தியாவுக்கே விடியலை ஏற்படுத்தும் நிலை வரப்போகிறது. அதற்கு நீங்கள் தயாராக இருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.