நடுத்தர வர்க்கத்தினரின் பாக்கெட்டை நிறைக்கும் புதிய வரி விதிப்பு முறை – நிர்மலா சீதாராமன்

Nirmala Sitharam On New Tax Regime: ரிசர்வ் வங்கியின் மத்திய குழுவின், பட்ஜெட்டிற்குப் பிறகான வழக்கமான செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று (பிப். 11) நடைபெற்றது. அப்போது, பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “அரசாங்கத் திட்டங்கள் மூலம் தனிநபர்களை முதலீடு செய்யத் தூண்டுவது அவசியமில்லை. ஆனால் முதலீடுகள் தொடர்பான தனிப்பட்ட முடிவுகளை எடுக்க அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். 

நிலையான வரி விலக்குக்கு நாங்கள் அனுமதித்த விதம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட விகிதங்கள், வெவ்வேறு அடுக்குகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட வரி விகிதங்கள், இது உண்மையில் மக்கள், வரி செலுத்துவோர், குடும்பத்தினர் ஆகியோரின் கைகளில் அதிக பணத்தை சேமிக்க வைக்கிறது,” என்றார். 

நிர்மலா சீதாராமன் தனது சமீபத்திய பட்ஜெட்டில் புதிய வரி முறையைத் தேர்ந்தெடுக்கும் நபர்களுக்கு ரூ.50,000 நிலையான விலக்கு பலனை நீட்டிக்க முன்மொழிந்தார். “அரசாங்கம் அத்தகைய நடவடிக்கைகளைத் தூண்டுவது கூட அவசியமில்லை என்று நான் நினைக்கிறேன். தனது பணத்தை சம்பாதித்து, தனது குடும்பத்தை நடத்தும் ஒரு நபர் தனது பணத்தை எங்கு வைக்க வேண்டும் என்பதை அறியும் அளவுக்கு புத்திசாலியாக இருக்கிறார். அதனால் நான் அதைச் செய்வதில் இருந்து அவரை ஊக்கப்படுத்தவில்லை அல்லது குறிப்பாக எதையும் செய்ய அவர்களைத் தூண்டவில்லை. அவர் ஒரு ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். 

அடுத்த நிதியாண்டு முதல் நடைமுறைக்கு வரும், புதுப்பிக்கப்பட்ட சலுகை வரி முறையின் கீழ், 3 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரி விதிக்கப்படாது. ரூ. 3 முதல் 6 லட்சம் வரை வருமானம் இருந்தால் 5 சதவீதம் வரி விதிக்கப்படும். ரூ. 6-9 லட்சத்துக்கு 10 சதவீதமும், ரூ.9-12 லட்சத்துக்கு 15 சதவீதமும், ரூ.12-15 லட்சத்துக்கு 20 சதவீதமும், ரூ.15 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 30 சதவீதமும் வரி விதிக்கப்படும்.

இருப்பினும், ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை வரி விதிக்கப்படாது. அரசின் இந்த நடவடிக்கையானது நடுத்தர வர்க்கத்தினரின் வரிச்சுமையைக் குறைப்பதற்காகவே உள்ளது என்றும், நேரடி வரி விதிப்பை எளிமையாக்குவது என்ற இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு இணங்குவதாகவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

அதானி குழும நெருக்கடி குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “இந்திய கட்டுப்பாட்டாளர்கள் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள் மற்றும் அவர்கள் தங்கள் களத்தில் வல்லுநர்கள். கட்டுப்பாட்டாளர்கள் இந்த விஷயத்தை கைப்பற்றியுள்ளனர். அவர்கள் இப்போது மட்டுமில்லை, எப்போது தங்களின் பணியில் கவனம் செலுத்துகின்றனர்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.