விஜய் தொலைக்காட்சியின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த மாதம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இந்த ஆறாவது சீசனின் டைட்டில் வின்னராக அசீம் தேர்வு செய்யப்பட்டார், பல சர்ச்சையான பேச்சுக்களுக்கு பெயர்போன அசீம் வின்னரானது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மக்களின் மனதை அதிகம் வென்ற விக்ரமன் இரண்டாமிடம் பிடித்தார் மற்றும் இந்த சீசனில் ஷிவினுக்காக மூன்றாவது பரிசு வழங்கப்பட்டது. விக்ரமன் அல்லது ஷிவின் டைட்டில் வின்னர் ஆவார்கள் என்று பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில் அசீம் வெற்றி பெற்றது இன்னும் பலராலும் நம்பமுடியவில்லை. பிக்பாஸ்-6 நிகழ்ச்சியில் அசீம் சண்டை போடாத போட்டியாளர்கள் என்று யாரும் இருக்கமுடியாது, அந்த அளவிற்கு அவர் அனைத்து போட்டியாளர்களிடமும் நடந்திருக்கிறார்.
பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது தான் அசீம் இப்படி நடந்துகொண்டார் என்றால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியும் அசீம் சண்டைபோடும் நோக்கத்தில் தான் இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீஸனும் முடிவடைந்த பிறகு அனைத்து போட்டியாளர்களையும் ஒன்றிணைத்து பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கமான ஒன்று. அதுபோல இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் முடிவடைந்த நிலையில் பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது, அந்த வீடியோ தற்போது வைரலாகி ரசிகர்களிடையே ஹைப் ஏற்றியுள்ளது.
ப்ரோமோ வீடியோவில் ஒவ்வொரு போட்டியாளரிடமும் ஒவ்வொரு கேள்வி கேட்கப்படுகிறது. இந்த வீட்டில் யாரை பற்றி புத்தகம் எழுத விரும்புகிறீர்கள் எனும் கேள்விக்கு அசீம், ஜனனியை பற்றி எழுத விரும்புவதாக கூறினார். இந்த வீட்டில் உள்ளவர்களில் யாரை போல மாற விரும்புகிறீர்கள் என்கிற கேள்விக்கு தனலட்சுமி அசீம் அண்ணாவை போல மாற விரும்புவதாக கூறி கலகலப்பாக சென்று கொண்டிருந்த வீடியோவில் ஒரு விறுவிறுப்பான சம்பவம் நடந்தது. அதாவது இந்த வீட்டில் அதிகமாக காசிப் பேசுவது யார் என்று கேட்டதற்கு அசீம் தான் பேசுவார் என்று விக்ரமன் கூற, உடனே அசீம் பேசுறவங்களே ஆயிரம் காசிப் பேசிருக்காங்க அவங்க சொல்லும்போது தான் எனக்கு சிரிப்பா இருக்கு என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். இன்றைய தினம் பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ள நிலையில் இந்த வீடியோ வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது.