வாலாஜாபாத்: காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகா அலுவலகத்தின்கீழ் மாகறல், தென்னேரி, வாலாஜாபாத் என்ற 3 குறுவட்டங்கள் உள்ளன. இந்த குறுவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் புதிய குடும்ப அட்டை, பெயர் சேர்த்தல், நீக்கல், நில அளவை, பிறப்பு-இறப்பு சான்றிதழ், முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், புதிய பட்டா பெறுதல் உள்பட பல்வேறு அரசு பணிகளுக்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கின்றனர். எனினும், அதன்பிறகு தங்களின் விண்ணப்பங்கள் எந்த நிலையில் உள்ளது என்பதை அறிய சுமார் 5 கிமீ தூரத்தில் உள்ள தாலுகா அலுவலகத்தில் அதிகாரிகளை சந்திக்க நாள்தோறும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர்.
வாலாஜாபாத் குறுவட்டத்துக்கு உட்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில், இதுபோன்ற பல்வேறு பணிகளுக்கான விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளது. தங்களின் விண்ணப்பங்கள் குறித்து கிராம மக்கள் தகவல் தெரிந்து கொள்ள, தங்களது பகுதியில் புதிய வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அமைத்து தரவேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து, கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, வாலாஜாபாத் காவல் நிலையத்தின் பின்புறம் கடந்த 4 மாதங்களுக்கு முன் குடியிருப்புடன் கூடிய புதிய வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை க.சுந்தர் எம்எல்ஏ பங்கேற்று திறந்து வைத்தார். எனினும், அக்கட்டிடம் இதுவரை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் பூட்டியே கிடக்கிறது.
இதனால் புதிதாக கட்டிய வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம் மற்றும் மதில் சுவர்களில் விரிசல் மற்றும் கதவுகள், ஜன்னல்கள் சேதமாகி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் தங்கள் விண்ணப்பங்களின் நிலை குறித்து மீண்டும் கிராம மக்கள் சுமார் 5 கிமீ தூரத்துக்கு சுற்றிவர வேண்டிய அவலநிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, வாலாஜாபாத் குறுவட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராம மக்களின் அவலநிலையை கருத்தில் கொண்டு, இங்கு புதிதாக கட்டப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.