சென்னை: ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
ஒரே சமயத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் ஆளுநராக பொறுப்பு வகிப்பது இதுவே முதல்முறை. இதை ஒட்டுமொத்தமாக தமிழகத்துக்கு கிடைத்த பெருமையாகத்தான் கருதுகிறோம். கடுமையாக உழைத்தால் அதற்கான அங்கீகாரத்தை வழங்குவதற்கு பிரதமர் மோடி ஒருபோதும் தயங்கமாட்டார்.
ஓரிரு நாட்களில் பதவி ஏற்பு விழா நடைபெற இருக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தை பொறுத்தவரை, அதிக அளவில் இருக்கும் பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோரின் மேன்மைக்கு உழைப்பதுதான் தமிழகத்துக்கு பெருமையாக இருக்கும்.
ஜார்க்கண்ட் மாநிலத்துக்கும், தமிழகத்துக்கும் இடையே புதிய இணைப்பை, புதிய உறவை உருவாக்குவேன். அதன் மூலம் இரு மாநிலங்களின் வளர்ச்சிக்குத் தேவையான சூழலை உருவாக்குவோம். ஆளுநர் என்பவர் அரசியல் குறித்து அதிகம் பேசாமல் இருப்பது நல்லது என்று நான் கருதுகிறேன். அரசியலில் இருந்து பரிணாம வளர்ச்சியாக ஆளுநர் என்ற உயர்ந்த நிலைய அடைந்த பிறகு, அரசியலில் நாட்டம் கொள்ளாமல், முன்னேற்றத்தில் நாட்டம் கொள்வதுதான் சிறந்ததாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
தி.க. தலைவர் வாழ்த்து: திக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “சி.பி.ராதாகிருஷ்ணன் பொது மனிதராகக் கடமையாற்றி, அரசியல் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாத்து சிறப்பாகப் பணிபுரிவர் என்று நம்பி, கொள்கை வேறுபாடுகளைத் தாண்டி வாழ்த்து தெரிவிக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.