ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்: வழக்கு தொடர்ந்த அதிமுக மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம்

Erode East By-election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணி கட்சிகள், அதிமுக கூட்டணி கட்சிகள், நாம் தமிழர், தேமுதிக உள்ளிட்டவை தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றனர்.

தேர்தலுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி அதிமுக சார்பில், அதன் அமைப்புச் செயலாளர் சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை பொறுப்புத் தலைமை நீதிபதி அமர்வு நாளை (பிப்ரவரி 16) விசாரிக்க உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா மரணமடைந்ததை அடுத்து, அத்தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இத்தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், தொகுதியின் வாக்காளர் பட்டியலை சரி பார்த்த போது, அதில் இடம்பெற்றிருந்த பலர் தொகுதியில் இல்லை என்பதும், இறந்த வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படவில்லை என்பதும், பல வாக்காளர்களின் பெயர்கள் இரண்டுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம்பெற்றுள்ளதும் தெரியவந்ததாகக் கூறியுள்ளார்.

தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கையான 2 லட்சத்து 26 ஆயிரத்து 876 வாக்காளர்களில், 7 ஆயிரத்து 947 இறந்தவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை என்றும், 30 ஆயிரத்து 56 வாக்காளர்கள் தொகுதியில் வசிக்கவில்லை என்றும் இவர்கள் கள்ள ஓட்டு போட பயன்படுத்தக் கூடும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆளுங்கட்சியில் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் ஒருவர், பணபட்டுவாடா பற்றி நிர்வாகிகளிடம் பேசியுள்ளார் எனவும், 2021ம் ஆண்டு தேர்தலில் வாக்கு வித்தியாசம் என்பது 8 ஆயிரத்து 500 வாக்குகள் தான் எனவும், தற்போது இறந்தவர்கள், தொகுதியில் இல்லாதவர்கள் என 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பெயர்கள் பட்டியலில் நீடிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அதனால் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தக் கோரியும், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுவர் என்பதால் மத்திய படைகளை தேர்தல் பணிக்கு ஈடுபடுத்த கோரி தேர்தல் ஆணையத்துக்கு பல தேதிகளில் மனு அளித்திருந்ததாகக் கூறியுள்ளார்.

இந்த மனுக்களை பரிசீலிக்கவும், தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும், பூத் லிப் அடிப்படையில் அல்லாமல், வாக்காளர் அடையாள அட்டை அடிப்படையில் வாக்காளர்களை சரிபார்த்து வாக்களிக்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா அமர்வில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.