‘ஓம், அல்லா ஒன்றே’ என்ற மவுலானா மதானிக்கு மதத் தலைவர்கள் எதிர்ப்பு; ‘இந்தியா இந்து நாடு’ என முதல்வர் யோகி பதில்

புதுடெல்லி: டெல்லியில் முடிந்த ஜமாத் உலாமா-எ-ஹிந்த் மாநாட்டில் அதன் தலைவர் மவுலானா அர்ஷத் மதானி, ஓம் – அல்லா ஒன்றே எனக் கூறியமைக்கு இதர மதத் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதே சர்ச்சைக்கு பதிலளித்த உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ‘இந்தியா இந்து நாடு’ எனப் பதிலளித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 10-இல் துவங்கிய ஜமாத் உலாமா ஹிந்தின் 34-ஆவது மாநாடு டெல்லியின் ராம் லீலா மைதானத்தில் 3 நாள் நடைபெற்றது. இதன் இறுதி நாளில் அனைத்து மதங்களின் தலைவர்கள், குருமார்களும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் முன் மேடையில் பேசிய தலைவர் மவுலானா அர்ஷத் மதானியின் கருத்து சர்ச்சையானது.

இதில் மவுலானா மதானி பேசுகையில், ‘உலகிலேயே பழமையான மதம் இஸ்லாம், இந்தியாவில் தோன்றியது. அல்லாவும், ஓம் இரண்டும் ஒன்றே. ராமரோ, பிரம்மரோ இல்லாத காலத்தில் மனு யாரை வணங்கி இருப்பார் என நான் மதகுருமார்களிடம் கேட்டேன். இதற்கு சிலர் ‘அவர் ஓம் எனும் உருவம் இல்லாததை வணங்கியிருப்பார்’ எனக் குறிப்பிட்டனர். இந்த ஓம் என்பதைத்தான் நாம் அல்லா என்கிறோம். பாரசீக மொழியில் இதை ஃகுதா என்கிறார்கள். ஆங்கிலத்தில் காட் என்றழைக்கின்றனர். அதேபோல், அல்லாவின் முதல் இறைத்தூதர் ஆதம் ஆவார். இவரை இந்துக்கள் மனு எனவும், கிறித்துவர்கள் ஆதாம் என்றும் அழைக்கின்றனர். இம்மூன்று உள்ளிட்ட அனைத்து மதத்தினரின் முன்னோர், ஆதாம் ஆவார்’ எனத் தெரிவித்தார்.

இக்கருத்திற்கு இதர மதத் தலைவர்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்து அம்மாநாட்டிலிருந்து வெளியேறினர். இவர்களில் ஒருவரான ஜைன மதத் தலைவர் ஜெயின் முனி லோகேஷ், மேடை ஏறி தன் எதிர்ப்பை பதிவு செய்தார். இந்த விவகாரத்தில் மவுலானா மதானியுடன் தாம் பொது விவாதம் செய்யவும் தயார் எனவும் அறிவித்துள்ளார்.

இது குறித்து ஜெயின் முனி தனது ட்விட்டர் பக்கத்தில் இட்ட பதிவில், ‘மவுலானா மதானி சொல்லும் கருத்தை நானும், எனது மத குருமார்களாலும் ஏற்க முடியாது. இதன்மூலம், மதநல்லிணக்கமும், ஒற்றுமையையும் குலைக்க முயற்சிக்கப்படுகிறது. ஓம், அல்லா, மனு அவர்களது பிள்ளைகள் என்பதெல்லாம் வீண் பேச்சுக்கள். இதைபோன்ற ஆயிரம் கதைகளை என்னால் கூற முடியும்’ எனக் கூறியுள்ளார்.

முஸ்லிம் தலைவர்களும் மவுலானா மதானியின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மனுவும், ஆதமும் வெவ்வேறானவர்கள் தவிர ஒருவர் அல்ல எனவும், அல்லா-ஓம் இரண்டும் கூட ஒன்றல்ல என்றும் கூறி வருகின்றனர். இதே கருத்தை உபியின் சமாஜ்வாதி எம்பியான மவுலானா ஷபிக்கூர் ரஹ்மான் புர்க்கும், வலியுறுத்தி, மதானியை கண்டித்துள்ளார். மவுலானா மதானியின் கருத்திற்கு உபி முதல்வர் யோகியும் பதில் அளித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் யோகி, ”இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் இந்து என்பதால், இந்தியா ஒரு இந்து நாடு. ஏனெனில், இந்து என்பது எந்த ஒரு மதத்தையும், சமூகத்தையும் குறிக்கும் சொல் அல்ல. இந்து தேசத்தை எவராலும் தவிர்க்க முடியாது. இந்து என்பதை ஒரு சாதி, மதம் அடிப்படையில் புரிந்துகொள்ள முயல்வது தவறு. இந்தியா தொடர்ந்து ஒரு இந்து தேசமாகவே இருக்கும். ஒவ்வொரு இந்தியனும் அதன் அரசியலைமைப்பு சட்டத்தை உயரியதாக மதிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

சமீபத்தில் ஒரு பொது மேடையில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், ‘இந்து மற்றும் முஸ்லிம்களின் முன்னோர்கள் இருவரும் ஒரே மதத்தை சேர்ந்தவர்கள்’ எனக் கூறி இருந்தார். இவரது கருத்தை ஆமோதிக்கும் வகையில் தன் ஜனாத் உலாமா-எ-ஹிந்தின் மாநாட்டில் அதன் தலைவர் மவுலானா மதானியும் கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.