"கிளிகள் வளர்ப்பதை இந்தக் காரணத்தால்தான் வனத்துறையினரிடம் சொல்லவில்லை!"- ரோபோ சங்கர் மனைவி விளக்கம்

நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் அனுமதியில்லாமல் வளர்க்கப்பட்ட இரண்டு அலெக்சாண்டரியன் கிளிகளை, வனத்துறை அதிகாரிகள் அதிரடியாக மீட்டு கிண்டி தேசிய சிறுவர் பூங்காவில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து, ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா சங்கரிடம் பேசியபோது,

“இந்தக் கிளிகளை நாங்கள் நேற்றோ, இன்றிலிருந்தோ வளர்க்கவில்லை. கடந்த மூன்றரை வருடங்களாக வளர்த்து வருகிறோம். அதனால், வனத்துறையினரிடம் மறைக்கவேண்டும் என்ற எந்தத் திட்டமிட்ட நோக்கமும் இல்லை. ஏனென்றால், கிளிகளைப் பணம் கொடுத்து வாங்கவில்லை. கிஃப்டாக வந்த கிளிகள் இவை. முகப்பேரில் இருந்த என் தோழி ரயில்வே துறையில் பணிபுரிகிறார். ‘வேறு ஊருக்கு மாற்றலாகிச் செல்கிறேன். அங்கு வளர்க்கமுடியாத சூழல் இருப்பதால், நீங்களே வளருங்கள்’ என்றுக்கூறி என்னிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றார்.

ரோபோ சங்கர் குடும்பம்

எனக்கும் இந்த வகைக் கிளிகளை வளர்க்கவேண்டும் என்பது நீண்டநாள் ஆசை. அதற்கேற்றாற்போல், பிகிலும் ஏஞ்சலும் கிஃப்டாக கிடைத்தன. என் மகள் ‘பிகில்’ படத்தில் நடித்தபிறகு, வீட்டிற்கு வந்த கிளிகள் என்பதால் ‘பிகில்’, ‘ஏஞ்சல்’ என்று பெயரிட்டோம். எங்களை அக்கா, அம்மா என்றுதான் பேசும். குறிப்பாக, என் கணவரை ரோபோ என்று செல்லமாக அழைக்கும். எங்களுடன் அவ்வளவு பாசமாக இருந்தன. இந்த மூன்றரை வருடங்கள் எங்கள் குழந்தை மாதிரிதான் பார்த்துக்கொண்டோம். கிஃப்டாக தோழி கொடுத்த கிளிகளுக்கு எப்படி அனுமதி பெறமுடியும்? நாங்கள் ஒன்றும் விலை கொடுத்து வாங்கவில்லையே? அதனால்தான், வனத்துறையினரிடம் தெரிவிக்கவில்லை.

தற்போது, நாங்கள் இலங்கையில் உள்ளோம். வீட்டில் பணிபுரியும் அக்காவும், கணவரின் அண்ணன் மகளும்தான் இருக்கிறார்கள். நாங்கள் இல்லாத நேரத்தில் வந்து கிளிகளை எடுத்துச் சென்றிருக்கிறார்கள். அவர்களின் கடமையைச் செய்யட்டும். அதில், தவறில்லை. நாங்கள் ஊருக்கு வந்ததும் நேரில் சென்று விளக்கமளிக்கவுள்ளோம்” என்பவரிடம் “உங்கள் வீட்டில் கிளிகள் வளர்ப்பது தற்போது மட்டும் வனத்துறைக்கு எப்படித் தெரிந்தது?” என்றோம்.

ரோபோ சங்கர் குடும்பம்

“எப்படித் தெரிந்தது என்று தெரியாது. ஆனால், சமீபத்தில்தான் ஒரு தனியார் யூடியூப் சேனல் எங்கள் வீட்டிற்கு ஹோம் டூர் வீடியோ எடுக்க வந்தார்கள். அப்போது, கிளிகளை அறிமுகப்படுத்தினோம். அதேபோல, உமா ரியாஸ்கான் அக்காவும், ரேகா மேடமும் வந்து அவர்களது குக்கிங் சேனலுக்காக வீடியோ எடுத்தார்கள். அதிலெல்லாம் கிளிகளும் உள்ளன. அப்படிக்கூடத் தெரிந்திருக்கலாம். கிளிகளை மறைக்கும் நோக்கம் இருந்தால், நாங்கள் ஏன் வீடியோவில் காட்டப்போகிறோம். எங்கள் வீட்டில் மூன்று குட்டிகளை வளர்க்கிறோம். எல்லோரையும் நாய், கிளி என்று கூப்பிடமாட்டோம். குழந்தைகளை அழைப்பதுபோல்தான் அழைப்போம். அவர்களும் எங்களுக்குப் பதிலளிப்பார்கள். தற்போது, பிகிலும் ஏஞ்சலும் இல்லாதது வருத்தம்தான். ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது. ஆனாலும், வனத்துறையின் கடமையை மதிக்கிறோம். இது வழக்கமாக ஊரில் நடக்கும் விஷயம்தான். சினிமாத்துறையினரின் வீடு என்பதால் பெரிதாகிவிட்டது. இதனைப் பெரிதுபடுத்தவேண்டாம்” என்கிறார் கோரிக்கையாக.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.