சர்ச்சை எதிரொலி: ஹெச்எல்எஃப்டி 42 போர் விமானத்தில் ஒட்டப்பட்டிருந்த அனுமன் படம் நீக்கம்

பெங்களூரு: பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட ஹெச்.எல்.எஃப்.டி 42 ரக போர் விமானத்தில் அனுமன் படம் ஒட்டப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியதால், அந்தப் படத்தை ஹெச்.ஏ.எல். நிறுவனம் நீக்கியுள்ளது.

மத்திய பாதுகாப்புத் துறையின் சார்பில் நடத்தப்படும் ஏரோ இந்தியா சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். இதில் விமானம், பாதுகாப்பு தளவாடங்கள் தயாரிக்கும் 110 வெளிநாட்டு நிறுவனங்கள் உட்பட 811 நிறுவனங்களின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஹெச்.ஏ.எல் நிறுவனத்தின் அரங்கில் சூப்பர் சோனிக் டிரெய்னர் என அழைக்கப்படும் ஹெச்.எல்.எஃப்.டி 42 ரக போர் விமானம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விமானத்தின் வால் பகுதியில் அனுமன் புகைப்படம் ஒட்டப்பட்டிருந்தது. அதனருகே ‛புயல் வருகிறது’ என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.

இதனைக் கண்ட சிலர், ‘அனுமன் புகைப்படத்தை ஒட்டியது ஏன்?’ என்று அரங்கில் இருந்த பொறுப்பாளர்களிடம் கேள்வி எழுப்பினர். மேலும், அந்தப் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ‘ஹெச்.ஏ.எல் நிறுவனத்துக்கு மத அடையாளம் தேவையா?’ என கேள்வி எழுப்பினர். இதனால் சர்ச்சை ஏற்பட்டதைத் தொடர்ந்து ஹெச்.ஏ.எல். நிறுவன‌ அதிகாரிகள் அவசர ஆலோசனை மேற்கொண்ட‌னர்.

இதுகுறித்து ஹெச்.ஏ.எல் தலைவரும், நிர்வாக இயக்குநருமான அனந்தகிருஷ்ணன் கூறுகையில், ”ஹெச்.எல்.எஃப்.டி 42 ரக போர் விமானம் தொடர்பாக எழுந்த சர்ச்சை குறித்து விவாதித்தோம். அதில் அனுமன் படத்தை வைப்பது பொருத்தமற்றது என தெரியவந்தது. எனவே தற்போது அந்த படத்தை அகற்றியுள்ளோம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.