ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக திமுக அமைச்சர்கள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டு வருவோம் என்று திமுக சொல்லவில்லை பேசி உள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்து அவரிடம் தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டு வரப்படும் என திமுக கடந்த பொது தேர்தலில் வாக்குறுதி கொடுத்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது “தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்றோ, டாஸ்மாக் கடைகளை குறைப்போம் என்றோ தேர்தல் வாக்குறுதி கொடுக்கவில்லை. பிற மாநிலங்களை ஒப்பிடும்பொழுது தமிழகத்தில் தான் மது கடைகள் குறைவாக உள்ளது.
தமிழக முழுவதும் உள்ள கோயில்கள், பள்ளிகள், கல்லூரிகள் அருகே உள்ள மது கடைகள் கணக்கெடுக்கப்பட்டு 88 கடைகள் குறைக்கப்பட்டுள்ளன” என பதிலளித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய அவர் “அதிமுகவினர் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தோல்வியின் விரத்தியில் பேசி வருகிறார்கள். அவர்கள் சொல்வதெல்லாம் வேத வாக்கு அல்ல. திமுகவினரின் தேர்தல் பணி அலுவலகங்கள் அனைத்தும் அனுமதி பெற்று நிறுவப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் ஈரோடு கிழக்கு தொகுதி ஏராளமான வளர்ச்சியை அடைந்துள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி ஒரு மணிமகுடமாக இருக்கும். திமுக காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும்” என்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி உள்ளார்.