நாடாளுமன்ற எம்பியாக இருக்கும் சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதியின் செயல்பாடு என்ன? மாநிலங்களவை இணையதளத்தில் பகீர்

புதுடெல்லி: நாடாளுமன்ற எம்பியாக இருக்கும் சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் செயல்பாடு குறித்து மாநிலங்களவை இணையதளத்தில் வெளியாகி உள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகளின் அமர்வின் தலைவராக இருந்த உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ஓய்வு பெற்ற நான்கு மாதங்களுக்குப் பிறகு, கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி மாநிலங்களவைக்கு பரிந்துரைக்கப்பட்டார். இவரது நியமனத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் ‘வெட்கக்கேடு’ என்று கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டனர். மேலும் ரஞ்சன் கோகாயை மாநிலங்களவை உறுப்பினராக்கும் முடிவை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் சிலரும் விமர்சித்தனர்.  

இருப்பினும், மாநிலங்களவை உறுப்பினராக ெசயல்பட்டு வரும் ரஞ்சன் கோகாய், இதுவரை அவரது நாடாளுமன்ற பங்களிப்பு சொல்லிக் கொள்ளும் அளவில் இல்லை என்பது நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் தெரியவந்துள்ளது. அதன்படி, எம்பி ரஞ்சன் கோகாய் நாடாளுமன்றத்தில் இதுவரை எந்த கேள்வியும் கேட்கவில்லை. எந்தவொரு தனிநபர் மசோதாவையும் அறிமுகப்படுத்தவில்லை. மாநிலங்களவை நடவடிக்கைகளில் பங்கேற்கவில்லை. அதேநேரம் வெளியுறவுத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக ரஞ்சன் கோகாய் இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது வருகை பதிவு 30% என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக பதிவேட்டில் கையெழுத்திடும் உறுப்பினர், அவையில் எந்த நாளிலும் கலந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.