விருதுநகர் காங்., – எம்.பி., மாணிக்கம் தாகூர் பேட்டி:
லோக்சபா தேர்தலில், விருதுநகர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என, ம.தி.மு.க., தலைமை நிலைய செயலர் துரை மட்டுமல்ல, பலரும் விரும்புகின்றனர்; என் விருப்பமும் அது தான். விருதுநகர் தொகுதியில் துரை போட்டியிட்டால் வரவேற்பேன்; அதற்கு கூட்டணி கட்சி தலைமை முடிவு செய்ய வேண்டும்.
* கூட்டணி இல்லாம, தனித்தனியா நின்னா விருதுநகரை விரும்பும் உங்க எல்லார் விருப்பமும் நிறைவேறுமே… ஆனா, அப்படி ஒரு நிலை வந்தா, தேர்தலில் நிற்காம, ‘ஜகா’ வாங்கிடுவீங்களே!
ஐ.என்.டி.யு.சி., மாநில பொதுச்செயலர் பன்னீர்செல்வம் அறிக்கை:
கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, ஐந்து மாதங்களாக ஓய்வூதியம் வழங்கவில்லை. ஏற்கனவே, ஓய்வூதியம் வழங்கிய, 75 சதவீதம் பேருக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. தகுதியுள்ள அனைவருக்கும் காலம் தாழ்த்தாமல், உடனே ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் வாக்குறுதியே அந்தரத்துல தொங்கிட்டு நிற்குது… இதுல மத்தவங்க ஓய்வூதியம் இப்போதைக்கு நடக்குமா?
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிக்கை:
கோவை நீதிமன்ற வளாகத்தில் வாய்தாவுக்கு சென்ற இருவர் மீது, ஐந்து மர்ம நபர்கள் திடீரென கொடூர தாக்குதல் நடத்தியதில், கோகுல் என்பவர் உயிரிழந்துள்ளார். குற்றங்களை ஆய்வு செய்து, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் இடமான நீதிமன்றங்கள் மற்றும் அங்கு வருவோரின் பாதுகாப்பை, அரசு உறுதி செய்வது மிகுந்த அவசியம்.

போற போக்கை பார்த்தா, இந்த ஆட்சியில போலீஸ் ஸ்டேஷன்களுக்கே பாதுகாப்பில்லாத நிலை வந்துடுமோன்னு பயமா இருக்குது!
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை:
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை திட்ட பணிகளை விரைவுபடுத்துமாறு முதல்வர் ஸ்டாலின் கேட்கிறார். தமிழகத்தில், 2019 – 22ல் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக, 7,592 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது. தமிழக அரசின் ஆதரவு இல்லாததால், 2021ல் நான்கு நெடுஞ்சாலை திட்டங்களையும், தடையில்லா சான்று வழங்க தாமதம் செய்ததால், 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க திட்டத்தையும் கைவிட, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்தது.

தவறை தங்கள் அரசு மீது வைத்துக் கொண்டு, மத்திய அரசு மீது குற்றம் சொன்னதை, இப்படி ‘பட்’டுன்னு போட்டு உடைச்சிட்டாரே!
பா.ஜ., மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் பேட்டி:
கோவை போன்ற பரபரப்பான நகரில், எது மிகவும் பாதுகாப்பான பகுதி என நினைக்கிறோமோ, அந்த நீதிமன்றத்துக்கு அருகிலேயே, பட்டப்பகலில் கொலை நடந்துள்ளது. சட்டம் – ஒழுங்கு தமிழகத்தில் எவ்வளவு கெட்டுப்போயுள்ளது என்பதை நாம் இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம். தமிழகத்தின் கவனம் முழுக்க ஈரோடில் இருக்கிறது; மற்ற பகுதி மக்களின் பாதுகாப்பிலும், தி.மு.க., அரசு அக்கறை கொள்ள வேண்டும்.

ஓட்டுக்கு எவ்வளவு தரலாம்னு, ‘கால்குலேட்டரை’ தட்டி கணக்கு பார்த்துட்டு இருப்பவங்களுக்கு, இதுக்கெல்லாம் எங்க நேரம்?
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்