இந்த ஆண்டின் தொடக்கத்தில் 121 பில்லியன் டாலர் சொத்துகளுடன் உலகின் மூன்றாவது மிகப்பெரிய பணக்காரராக இருந்தவர் இந்தியாவின் கௌதம் அதானி. கடந்த ஓராண்டில் மட்டும் அதானியின் சொத்தில் 44 பில்லியன் டாலர் கூடியிருந்தது. அடுத்த சில வாரங்களில் எலான் மஸ்க்கை பின்னுக்குத் தள்ளி, உலகின் இரண்டாவது மிகப்பெரிய பணக்காரர் என்ற இடத்தை அதானி அடைந்துவிடுவார் என உலக பொருளாதார நிபுணர்கள் கணித்திருந்த வேளையில்தான், ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை வெளியாகி, அதானி குழுமத்தை சரவரவென இழுத்து கீழே தள்ளியிருக்கிறது.
ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கைக்குப் பிறகு, அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட 10 நிறுவனங்களின் மதிப்பு 71 விழுக்காடு வீழ்ந்திருகிறது. டாப் 3 என்ற நிலையலிருந்த அதானி, இன்றைக்கு உலகப் பணக்காரர்கள் வரிசையில் 24-வது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். அதானியின் மொத்த சொத்து மதிப்பு 52.4 பில்லியன் டாலராக சுருங்கிவிட்டது. பங்குகளின் விலையை உயர்த்திக் காண்பிக்க அதானி குழுமம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் வெளியிட்ட இந்த ஆய்வறிக்கை அதானி குழுமத்துக்கு மட்டுமல்ல, மத்திய அரசுக்கும் தூக்கத்தை கெடுத்து பெரும் தலைவலியாய் மாறியது.

“அதானிக்கும் பிரதமர் மோடிக்கும் தனிப்பட்டரீதியில் நெருங்கிய நட்புறவு இருக்கிறது. மத்திய அரசின் உடந்தை இல்லாமல் பங்குச்சந்தையில் அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டிருக்க வாய்ப்பே இல்லை. பிரதமர் மோடி வெளிநாடு செல்லும் போதெல்லாம், அதானியையும் அழைத்துச் சென்று ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார். எனவே அதானி குழுமத்தின் மோசடிகள் குறித்து பிரதமர் வெளிப்படையாக பதிலளிக்க வேண்டும். பா.ஜ.க-சுக்கு கௌதம் அதானி கொடுத்த தேர்தல் நிதி எவ்வளவு?” என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார். அதானியும் பிரதமர் மோடியும் விமானத்தில் ஒன்றாக இருக்கும் படங்களையும் அவர் எடுத்துக் காட்டினார்.
ஆனால், `ராகுல் காந்தியின் பேச்சு மிக மலிவானது’ என மத்திய அரசு சாடியதுடன், அவர் பேச்சின் சில பகுதிகளும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன. அதானி விவகாரத்தில் மறைப்பதற்கோ, பயப்படவோ ஒன்றுமே இல்லை என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார். மற்றபடி, அதானி குறித்து பேசுவதையே பா.ஜ.க-வினரும், மத்திய அமைச்சர்களும் தவிர்த்தனர். அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையும் ஏற்கப்படவில்லை.

அதேசமயம் ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியான நாள்முதல், மக்களின் கவனத்தை அதிலிருந்து திசைதிருப்புவதற்காக பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு எடுத்துவருகிறது என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்திருக்கின்றன. அதற்கேற்ப சமீப நாள்களில் சில விவகாரங்கள் தேசிய அளவிலும், பிராந்திய அளவிலும் பூதாகரமாக வெடித்திருப்பதும் கவனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவற்றில் முக்கியமானவற்றை இங்கே காண்போம்.
காந்தி பெயர் சர்ச்சை
அதானி விவகாரம் மக்களவையிலும், மக்கள் மன்றத்திலும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த சமயத்தில், பிப்ரவரி 8-ம் தேதி நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, “மத்திய அரசு நேருவின் பெயரைக் குறிப்பிட மறந்தால் காங்கிரஸ் கட்சியினர் ஆதங்கப்படுகிறார்கள். நேரு சிறந்த மனிதர் என்றால், அவரின் பெயரை குடும்பப் பெயராக வைக்காமல் ஏன் காந்தியின் பெயரை வைக்கிறீர்கள்… நேருவின் பெயரை வைப்பதில் என்ன தயக்கம்?” என்று சாடினார். மோடியின் இந்தப் பேச்சால் மக்களவையில் பா.ஜ.க எம்.பி-க்களின் சிரிப்பலை நீண்ட நேரம் ஒலித்தது. சமூக வலைதளங்களிலும் இது தொடர்பான வாதங்கள், விவாதங்கள் அடங்கவே சில நாள்களானது.
“பொதுவாகவே குடும்பப் பெயரை, தங்கள் பெயருக்குப் பின்னால் சேர்த்துக் கொள்வது வட இந்தியர்களின் பழக்கம். பார்சி சமூகத்தைச் சேர்ந்த பெரோஸ் காந்தியை இந்திரா காந்தி திருமணம் செய்தபிறகுதான், நேரு குடும்பத்தினரின் பெயருக்குப் பின்னால் காந்தி பெயர் முதன் முதலாக வந்தது. பெரோஸ் காந்தி- இந்திரா காந்தி தம்பதியின் மகன்களான ராஜீவ், சஞ்சய் ஆகியோரின் பெயர்களுக்குப் பின்னாலும் அப்படித்தான் காந்தி பெயர் வந்தது. சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ராகுல் காந்திக்கும் அதே அடிப்படையில்தான் காந்தி பெயர் நீடிக்கிறது.
பிரியங்கா காந்தி ராபர்ட் வதோராவை திருமணம் செய்துகொண்டதால் அவர்களின் குழந்தைகளான மிராயா, ரைஹான் ஆகியோர் பெயர்களுக்குப் பின்னால் காந்தி இல்லை, வதோராதான் இருக்கிறது. எனவே மகாத்மா காந்திக்கும் நேரு குடும்பத்தினரின் பெயருக்குப் பின்னால் இருக்கும் காந்திக்கும் சம்பந்தமில்லை” என்று காங்கிரஸார் நீண்ட விளக்கங்களை கொடுத்தனர். அதானி குறித்த பேச்சுகளை மக்கள் மன்றத்திலிருந்து திசைதிருப்பவே பிரதமர் மோடி, வீம்புக்கு காந்தி பெயரை இழுத்திருக்கிறார் என்று காங்கிரஸ் கட்சியினரும் பதிலடி கொடுத்தனர்.

பிபிசி ஆவணப்படம்
குஜராத் கலவரத்தில் பிரதமர் மோடிக்கு தொடர்பு இருப்பதாக பிபிசி வெளியிட்ட ஆவணப்படம் குறித்த சர்ச்சைகள் கடந்த 2 வாரங்களில் பல நாள்கள் தலைப்புச் செய்தியாகவே இருந்தன. “India: The modi question” என்ற பெயரில் 2 பாகங்களாக வெளியான ஆவணப்படத்தை மத்திய அரசு தடைசெய்தது. ஆனால் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என சமூக வலைதளங்களில் ஆவணப்படம் வேகமாகப் பரவியது. “தடை செய்யாமல் இருந்திருந்தால்கூட பெரும் அளவில் பேசுபொருளாகியிருக்காது, இந்த விவகாரத்தை வேண்டுமென்ற பேசவைக்க மத்திய அரசு முயல்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
அதற்கேற்ப பல மொழிகளில் ஆவணப்படம் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. ஆவணப்படத்தை திரையிட்டவர்கள், பார்த்தவர்கள் என பலர் மீது தேடித்தேடி வழக்குகள் பதியப்பட்டன. பிபிசி-யை இந்தியாவிலிருந்து தடைசெய்ய வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் இந்து அமைப்பு சார்பில் வழக்கும் தொடரப்பட்டன. இந்த விவகாரம் பல நாள்கள் செய்தி ஊடகங்களையும், சமூக ஊடகங்களையும் ஆக்கிரமித்திருந்தது.

பிபிசி அலுவலகத்தில் வருமான வரிச்சோதனை
பிபிசி ஆவணப்படம் குறித்த சர்ச்சை அடங்குவதற்குள், டெல்லி, மும்பையிலுள்ள அந்த நிறுவனத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. 3 நாள்களாக தொடர்ந்துவரும் சோதனையில் ஏதேனும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதா என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. தனி நபர்களையோ, நிறுவனங்களையோ, அரசியல் கட்சிகளையோ ஒடுக்க மத்திய அரசு சி.பி.ஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்புகளை ஏவுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறது என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்திருக்கின்றன.

வருவாய் மோசடியில் பிபிசி ஈடுபட்டதற்கான முகாந்திரம் ஏதேனும் இருக்கிறதா என்பதை வெளிப்படுத்த வேண்டுமென்றும் கோரிக்கைகளும் எழுந்திருக்கின்றன. அதே நேரத்தில், வருமான வரித்துறையினரின் ஆய்வு நடவடிக்கை சட்டபூர்வமானது, ஆய்வு நடக்கும் நேரத்துக்கும், அரசாங்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா விளக்கம் அளித்திருக்கிறார். அமெரிக்க அரசும், பல சர்வதேச அமைப்புகளும்கூட கண்டிக்கும் அளவுக்கு, பிபிசி அலுவலகங்களில் நடந்துவரும் வருமான வரித்துறை சோதனை உலகம் முழுக்க பேசுபொருளாகியிருக்கிறது.
இவ்வாறு ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியான பிறகு, நாடு தழுவிய அளவில் அடுத்தடுத்து ஏதேனும் ஒரு சர்ச்சை வெடித்துக் கொண்டேயிருப்பது தற்செயலானது தானா… அல்லது பின்னணி ஏதேனும் இருக்கிறதா என்ற விமர்சனங்களும் எழத் தவறவில்லை.