சென்னை: அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் கேள்வித்தாள் விநியோகிக்கப்பட்டு ரயில் பயணம் குறித்து பயணிகளின் கருத்து கேட்கப்பட உள்ளது என மெட்ரோ நிர்வாகம் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னை பெருநகரில் முதல்கட்டமாக பரங்கிமலை-சென்னை சென்ட்ரல், விமானநிலையம்-விம்கோநகர் ஆகிய 2 வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு தினசரி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதில், கடந்த சில மாதங்களாக தினமும் 1.80 லட்சம் முதல் 2.40 லட்சம் பேர்வரை பயணம் செய்து வருகின்றனர். இந்த எண்ணிக்கையை மேலும் உயர்த்தும் விதமாக, பல்வேறு நடவடிக்கைகளை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் பயணிகளின் தேவைகளைப் புரிந்துகொள்ளவும், அவர்களின் ஆதரவை மேம்படுத்தவும் கணக்கெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ளது. முதலாவது கருத்து கேட்பு கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. தற்போது 2வது கருத்து கேட்பு அடுத்த வாரம் நடைபெற உள்ளது. அதன்படி குறைந்தபட்சம் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பயணிகளுக்கு கேள்வித்தாள் விநியோகிப்படும். அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்த கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பயணிகளின் சுயவிவரம், மெட்ரோ ரயிலை பயன்படுத்தக் காரணம். மெட்ரோ ரயில் பயணம் எப்படி இருக்கிறது, சேவை தொடர்பான கருத்துகளும் மற்றும் வசதிகளை மேம்படுத்த பொது ஆலோசனைகளை கேட்டு பதிவு செய்ய உள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.