புதுடெல்லி: வடகிழக்கு பகுதியின் பாஜக தேர்தல் இணை பொறுப்பாளர் ரிதுராஜ் சின்ஹா நேற்று கூறியதாவது: கடந்த 1963 டிசம்பர் 1-ம் தேதி இந்தியாவின் 16-வது மாநிலமாக நாகாலாந்து உருவானது. அப்போது முதல் இதுவரை ஒரு பெண் எம்எல்ஏ கூட தேர்ந்தெடுக்கப் படவில்லை. இப்போது சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிட பெண் வேட்பாளருக்கு பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2022 மார்ச்சில் அம்மாநிலத் திலிருந்து முதன்முறையாக மாநிலங்களவைக்கு பெண் எம்.பி.யாக பங்நோன் கோன்யக் பாஜக சார்பில் தேர்வு செய்யப்பட்டார்.
வடகிழக்கு மாநிலங்களின் மீதான பார்வையை கடந்த 8 ஆண்டுகளில் பிரதமர் மோடி அரசு மாற்றியமைத்து பல நலத்திட்டங்களை அமல்படுத்தியது.
மேகாலயா, நாகாலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் வளர்ச்சிக்கான அரசியலை முன்னெடுத்து அனைத்து சமூகத் தினருக்கான கட்சி என்பதை பாஜக தொடர்ச்சியாக உறுதி செய்து வருகிறது. அதனை எடுத்துக்காட்டும் விதமாக, மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் போட்டியிடும் 80 வேட்பாளர்களில் 75 பேர் கிறிஸ்தவர்கள் ஆவர். மேலும், எஞ்சிய 5 இடங்களுக்கும் கூட இந்து மதத்தை சாராதவர்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ரிதுராஜ் சின்ஹா கூறினார். மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் பிப்ரவரி 27-ம்தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.